10/05/2006

தேன்கூடு அக்-06 படைப்புகள் விமர்சனம் 1 to 10

விடுதலை - எதிலிருந்து? எப்படி?

இந்த கேள்விக்கு பதில் எப்பொழுதும் ரிலேடிவ். ஏனெனில் உலகார்த்தமாகப் பார்த்தால், ஒன்றிலிருந்து பெறப்படும் விடுதலை மற்றொன்றில் அடிமைப்படுவதாக ஆகிவிடுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது.

அர்த்தமுள்ள இந்துமதம் - கட்டுரைத் தொகுப்பில் ஒரிடத்தில் கண்ணதாசன், சிகரெட்டிலிருந்து விடுபட, வெற்றிலையைத் தேட முயல, பின்னர் வெற்றிலையிலிருந்து விடுபட வேறு எதனையாவது தேட வேண்டிவரும் என்ற கருத்தில் எழுதப்பட்ட வரிகள் இப்பொழுது நினைவிலாடுகிறது.

விடுதலை என்ற இந்த தலைப்பு எத்தனையோ சிந்தனைகளைத் தூண்டி விடக்கூடியது. ஒவ்வொரு சிந்தனைகளும் எப்படி என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இருக்கிறது.

விமர்சனங்கள், ஆக்கத்திற்கு கிடைக்கும் அங்கீகாரங்கள். அங்கீகாரத்திற்கு ஆசைப்படாத எழுத்து உண்டா? விமர்சித்தல் என்பது கூட ஒரு படைப்பிலக்கியமே. திறனாய்வு என்றும் இதனைச் சொல்வதுண்டு. விமர்சிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் , இந்த முயற்சிக்கு ஒரு காரணம். இத்தகைய விமர்சனங்கள் எழுதலாம் என்ற எண்ணத்திற்கு முன்னோடியாக இருந்த சோம்பேறிப் பையனுக்கு என் வணக்கங்கள்.

இங்கு எழுதப்படும் விமர்சனங்கள், என் பார்வையில் படைப்பு குறித்த எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக மட்டுமே இருக்கக்கூடும். இதிலிருக்கும் தவறுகளுக்கு என்னை மன்னித்து எழுத்தாளர்கள் இந்த விமர்சனங்களில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எனக்கு அறியத் தர வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

- யதா.
-----------------

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகள் இங்கு.

1. ஆசை (சிறுகதை)
^^^^^^^^^^^^^^^^^

//சொந்த காசை செலவு செய்து கட்சி வேலைக்கு காய்ந்ததால், இன்றைக்கு அடுத்த வேளை உலை வைக்க கட்சி ஆபிஸ் வாசலில்தான் நிற்க வேண்டிய வாழ்க்கை.//

படிக்க வேண்டிய ஒரு சிறு கதை.

கதை 'விடுதலை' என்ற கதா நாயகனைச் சுற்றி நகர்கிறது. கதா நாயகனது நினைவுகள், கருத்துகள் தொடர்பான பேச்சு என்று நகர்கிறது. சுதந்திரம் கிடைத்து அறுபதாண்டுகளையும் கடந்த நிலையில் சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் சாதீயத்தின் நீட்சி, அரசியலின் நிலை, தொண்டர்களின் வாழ்க்கை முறை இவற்றினை யதார்த்தமாகத் தொட்டுப் பார்க்கிறார். கதா நாயகன் இதிலிருந்து
மேலேறி வர வேண்டும் என்ற ஆவலுள்ளவன். ஆனால், வாய்ப்பிற்கு சுற்றியுள்ள மாந்தர்களையே நம்பவேண்டிய நிலை.

நிறை: எதார்த்தமான எழுத்தும், சம்பவ அமைப்புகளும், வார்த்தை பிரயோகங்களும். ஆரம்பத்தில் வீரனைக் கும்பிடாமல் எதையும் செய்ய மாட்டான் என்று ஆரம்பித்து, முடிவில் அதே விதத்தில் முடிப்பது.

குறை: கதாநாயகனது பெயர் விடுதலை என்று எழுதியிருப்பது தவறு. இந்த பெயர், தலைப்பிற்காக திணிக்கப்பட்ட விடுதலை என்ற பெயரோ என்ற எண்ணம் தருகிறது. இதனால் கதை மாந்தனது விடுதலை வேட்கை கவனத்தில் படாமல் சிதறிப்போக வாய்ப்பிருக்கிறது. தலைப்பிற்காக எழுதப்படும் கதைகளில் இத்தகைய கவனச்சிதறல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. ஒரு சிறுகதை,
முதல் வாக்கியத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது என்று 'வாத்தியார்' சொல்லுவார். இந்த கதை, ஒரு கட்டுரை போல நகர்கிறது என்பதனால், கதாசிரியர் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. என் அனுமானிப்பு தவறாகவும் இருக்கலாம்.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் நிர்மல்.


2. சூக்கும வழி
^^^^^^^^^^^^

சரளமான எழுத்து. ஒரு வார்த்தையைப் படிக்க ஆரம்பித்தவுடன் வழுக்கிக்கொண்டு ஓடவேண்டுமா? ஓகையின் இந்த "சூக்கும வழி" குறிப்பினைப் படிக்கலாம். ரசிக்கத்தக்க ஒரு உள்வாங்கல். குழந்தை பிறக்கும் முன்னர், எப்படியெல்லாம் சிந்திக்கக் கூடும் என்ற கற்பனையில் பிறந்த ஒரு படைப்பு.
பிறக்கப்போகும் அந்த குழந்தை, ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்று எண்ணம் கொண்டு எட்டிப் பார்க்கிறதாம்! அட..
ஆச்சரியப்பட வைக்கிறார் ஆசிரியர். வாழ்க்கையின் ஆரம்பமே ஒரு விடுதலைதான் என்று சொல்லியிருக்கிறார். அடுத்த பல ஆக்கங்களைத் தருவதற்கு முன்னோட்டம் என்று கொள்ளலாம்!

நிறை: சரளமான நடை; தெரிந்த விஷயம் ; தெரிந்த விதத்திலேயே சொல்லியிருக்கிறார்

குறை: குறைவான நீளம். இதே விசயத்தை நீட்டி முழக்கி செய்ய முடியும். பிறக்கப்போகும் குழந்தை என்பதையே சொல்லாமல், கற்பனைகளையும் ஒவ்வொரு அசைவுகளின் உணர்ச்சிகளையும் தெரிவிக்க முடியும். ஆனால், அறுவையாகிவிடும் என்பதால் ஆசிரியர் தவிர்த்திருக்கக் கூடும். அல்லது, கூடவே கொஞ்சம் மசாலாக்கள் சேர்க்க வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு,
பிறக்கப்போகும் குழந்தையின் காதுகள் தாயின் வழி நன்றாக கேட்கும் என்பது அறிவியல் பூர்வமாகக் கூட அறிந்த உண்மை. அபிமன்யூ - சக்கர வ்யூகம் குறித்து பிறப்பதற்கு முன்பே அறிந்தான் என்பது கதை. இதையெல்லாம் போல இன்னமும் கொஞ்சம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, சூக்கும வழியைக் கண்டுபிடித்திருக்கலாமோ?!

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் ஓகை.

3. விடுதலை? - கவிதை
^^^^^^^^^^^^^^^^^^

கவிதைகளை விமர்சிப்பது சற்றே கடினமானது. இதற்கு காரணம், சின்னஞ்சிறு சொற்களில் கவிஞர்கள் செய்யும் படைப்பு, எத்தனையோ எண்ணங்களைத் தரக்கூடும் என்பதே. இந்த விதத்தில், இந்த கவிதையும் சளைக்காமல் எத்தனையோ என்னச் சிறகுகளை விரிக்கவே செய்கிறது.

நம்மைச் சுற்றியிருக்கும், திணிக்கப்பட்ட ஏராளமான சமூக கொடுமைகளில் எப்பொழுது விடுதலை என்று ஆசிரியர் கேட்கிறார்.

நிறை: நேரடியாக அறியக்கூடிய பொருள்

குறை: என்னைப் பொருத்த வரையில் கவிதையென்பது ஒன்று, நேரடியாகச் சொல்லவேண்டும், அல்லது பொருளை மறைமுகமாக அறியும் வண்ணம் தூண்ட வேண்டும். அதிலும் முக்கியமாக சொற்ச் சிக்கனம் மிக மிக அவசியம்.


நாம் நிரந்தரச் சிறைவாசிகள்
நமக்கெப்போது விடுதலை?

தேசத்தின் விடுதலை
அன்னியர்களிடமிருந்து
இந்த
தேகத்தின் விடுதலை
வன்முறைகளிடமிருந்து

- மேற்சொன்ன வரிகள் என் பார்வையில் அவசியமில்லாதவை. இந்த வரிகளை நீக்குவதால் கவிதையின் நோக்கத்தில் எந்த குறையும் இல்லை. ஆனால் இருப்பதனால், கவிதை படிக்கும் வேகம் குறையும்.

எப்போது கிடைக்கும் விடுதலை?

- அட, இதுதாங்க தலைப்பா இருக்கணும்!

ஆசிரியர் மன்னிக்கவும்.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வலைஞன்.

4. விடுதலை!
^^^^^^^^^^^^

'வாத்தியார்' சுஜாதா பிரபலப்படுத்திய ஒரு வரி இருவரி கதைகளின் ஒரு முயற்சி. ஒரு வரிக்குள் ஒரு சம்பவம், அல்லது நிகழ்வைச் சொல்ல முடியுமா என்றால், இங்கு ஆசிரியர், ஒரு வரிக்குள் ஒரு வாழ்க்கையையே சொல்லுகிறார்!

ஆம்... காதல் என்பது மட்டுமே என்றால், அது ஒரு சிறு பகுதிதான். ஆனால், நிறைவேறாத காதலனின் நாயகன் வந்து நீரூற்றியதும் விடுதலை பெற்றது என்று சொல்லும் போது, கிழவியின் வாழ்க்கை முழுவதும் நாயகன் நினைவில் என்ற முழுமையைக் காட்டுகிறது.

நிறை: ஒரு வரி மற்றும், உடலில் சிறைப்பட்டிருந்த உயிர் - விடுதலை என்ற தலைப்புக்கேற்ற வார்த்தைகள்.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வலைஞன்.


5. விடுதலை!
^^^^^^^^^

மீண்டும் ஒரு இருவரிக்கதையுடன் வலைஞன். சொல்லும் விதத்தில் இங்கு ஆசிரியரின் திறமை தெரிகிறது.

நியூஸ். - இன்னிக்குதாங்க விடுதலை. பாவம், இன்னிக்கின்னு பார்த்து செத்துட்டான். - இதான் விசயம். ஆயுள் தண்டனைக்கைதி? சிறைக்கதவு திறக்கப்படும் முன்பே? இதெல்லாம் கதைக்கான இடைச் சொறுகல்.

நிறை: ஒரு செய்தியை சம்பவமாக்கி தலைப்பிற்குத் தகுதியாக்க்கிய திறன்.

குறை: சிறு கதைக்குறிய முழுமையான தாக்கத்தினைத் தராமல் போவது.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வலைஞன்.

6. விடுதலை?
^^^^^^^^^^^^

சிறப்பான சிந்தனைகளில் இதுவும் ஒன்று. கல்லிப்பால் குடுத்து அழிக்கப்படும் ஏராளமான பெண்குழந்தைகள் - இன்றைய சமூகத்தின் கொடுமைகளில் ஒன்று.
அடுத்த 20-30 வருடங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று பலராலும் அஞ்சப்படுகிறது. இது போன்ற கவிதைகள் வரவேற்கத்தக்கவை.

நிறை: சமூக சிந்தனை. சரளமான எழுத்து.

குறை: கதை கவிதை என்று ஒன்று இருக்கிறதா என்ன? சில நண்பர்கள் எனக்கு யாகூ வில் மின்மடலிட்டால், உடைத்து உடைத்து பதிலை அனுப்பும். இதனை கவிதை என்று நானும் சில முறை படித்து பின்னர் வெறுத்துப் போனதுண்டு. இந்த படைப்பு, கதை கவிதை என்பதை விட, கவிதை என்று சொல்லப்படுவதே கூட சரியானதுதான்.

கடைசி வரிதான் என்னைப் பொறுத்த வரை கவிதை: அதிலும் என்னுடைய சிறு மாற்றம்...

சுதந்திரக்
காற்றைச்
சுவாசிக்கும் அவள் ஆர்வத்தில்
மண்ணைப் போடக் காத்திருந்தது
கள்ளிப் பால் சொட்டு.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வலைஞன். விமர்சிக்கிறேன் பேர்வழி என்று உங்கள் கவிதையைத் திருத்தி எழுதியதற்கு மன்னியுங்கள்.

7. விடுதலை (அ) நவீன சாவித்திரி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

போதை - ஒரு மனிதனை எப்படி அலைக்கழிக்கும், எவ்வளவு தூரம் கீழ்த்தரமாக்கும் என்பது எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை; நேரடியாக அனுபவிக்கும் வரை; அல்லது முகத்தில் உண்மை அறையும் வரை. இது உலகில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சி. நம்மைச் சுற்றி எத்தனையோ போதைகள். அறிய அறிய எத்தனையோ வேதனைகள் உருவாகும். இதிலிருந்து இவர்களுக்கு விடுதலை என்று கிடைகும் அல்லது விடுதலையே கிடைக்குமா கிடைக்காதா? இதெல்லாம் சில நேரம் மனதில் தோன்றும் எண்ணங்கள்.

ஒரு மத்தியான நேரத்தில் நாங்கள் கல்லூரியை கட் செய்துவிட்டு அந்த தியேட்டரில் திரையிட்டிருந்த புது படத்தினை பார்க்க ஒதுங்கியிருந்தோம். சீக்கிரமே தியேட்டரில் வந்துவிட்டதால் எங்களை பார்த்த மேனேஜர் உள்ளே வாங்க என்று சொல்லி உட்கார வைத்துவிட்டார். உள்ளே ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் பத்து பதினைந்து பேர்கள் இருந்திருப்பார்கள். அந்த படத்தில், ரகுவரன் நடித்திருந்தார். போதையின் பிடியில் மாட்டிக்கொண்டு சீரழிந்து, மீண்டும் திருந்தி மீண்டும் மாட்டி என்று போகும். படத்தின் பெயர் ஞாபகம் இல்லை. தமிழகமெங்கும் இலவசமாகத் திரையிட்டார்கள் என்று நினைவு.

இந்த நவீன சாவித்திரியைப் படிக்கும் போது அப்படியே அந்த படம் நினைவிற்கு வந்தது.

நிறை: சமூக சிந்தனை. சரளமான, வேகமான எழுத்துக்கள். ஆசிரியருக்கு மிகவும் அருமையாக சம்பவத்தினை விளக்கக் கூடிய திறமை இருக்கிறது. கொஞ்சம் அடிக்கடி முயற்சி செய்தால், திறமையான எழுத்து படியும்.

குறை: நிறுத்தற்குறிகள் சரிவர இடாமை, பத்தி பிரிப்பதில் உள்ள அனுபவமின்மை. கதை என்று இதனைச் சொல்லமுடியாது. அனுபவம் என்ற தலைப்பின் கீழ் வரலாம்.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் ஏழிசை.

8. விடுதலை
^^^^^^^^^^^^
குமுதம் ஒரு பக்க கதை ரேஞ்ச். கட்டாயம் படிக்கலாம்.

எப்படியாவது ஏதாவது செய்து தன்னைத் தானே வெளிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற உந்துதல். அப்புறமென்ன, ஏமாற்றி, வெற்றி பெற்றாகிவிட்டது. ஆனால் மன உளைச்சல்?! இதிலிருந்து விடுதலை பெற வேண்டுமே! என்ன வழி, எடு டெலிபோனை, போடு ராங்கால், சொல்லிடு மேட்டரை! - இதுதான் கதை.

சிறில் அலெக்ஸின் எழுத்து நடை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. அருமையாக எழுதியிருக்கிறார் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.
படைப்பிலக்கியத்திற்காக நடத்தப்படும் தேன்கூடு போட்டிகளில் இருந்த ஓட்டைகள் குறித்து எழுந்த சிறு சலசலப்பின் நினைவு படிப்பவருக்கு வரும் விதத்தில் எழுதியிப்பது இந்த படைப்பின் அட்ராக்டிங் பேக்டர்.

நிறை: முதல் வரியிலேயே கதை ஆரம்பித்து விடுகிறது. வேகமான எழுத்து. கதா நாயகனின் மன ஓட்டத்தினை விளக்கும் சிறப்பு. விடுதலை என்பது எதிலிருந்து வேண்டுமானாலும் என்ற கருத்து. இதனாலெல்லாம் மன சஞ்சலம் குறையுமா? மன உளைஞ்சல் குறைவதற்கு தகுதியானவர்களிடம் தெரிவிப்பது மட்டுமே சரியாக இருக்குமே ஒழிய, இது சரியான வழியா? இத்தகைய சிந்தனைகளை ஏற்படுத்தும் முடிவு.

குறை: எழுத்துப்பிழைகள். சிற் சில இடங்களில் கதைகளுக்கே உரிய நிறுத்தற்குறிகளை ஆசிரியர் கவனிப்பது சிறப்பான பிரசண்டேசனுக்கு உதவி செய்யும்.

வித்தியாசமான ஒரு கோணம்:
At 6:24 AM, கோவி.கண்ணன் [GK] said...

மண்ணிப்பு கேட்பது என்பது வெறும் சடங்கு ஆகிவிட்டது ! சாமியாரிடம் சொன்னால் என்ன ? சைக்கிள் கடைக்காரரிடம் சொன்னால் என்ன ? எல்லாம் ஒன்று தான் என்று சொல்லவருகிறீர்கள் ... என்று சிற்றறிவுக்கு புரிகிறது ! சரிதானே ?

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ்.

9. விடுதலை எதற்கு?
^^^^^^^^^^^^^^^^^^

எதற்குப் பெற்றோம் விடுதலையை?! போராடிப் பெற்ற விடுதலை அடித்துக்கொள்வதற்காகவா?

- கேட்கிறார் வசந்த். சின்னஞ்சிறு கதைதான் என்றாலும், பழைய காலத்து வாடை அடித்தாலும், ரசிக்கத்தக்க ஒரு கதை. கட்டாயம படிக்கலாம். நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் பங்கேற்றவர் முன்னின்று, வெள்ளைக்காரனிடமிருந்து இதற்காகவா பெற்றோம் விடுதலை என்ற விதத்தில் கேள்வி கேட்டு காந்திய வழியில் சிந்திப்பதும், ஒரு அருமையான ஆலோசனையை முன் வைக்கும் பஞ்சாயத்தும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நிறை: படைப்பாளியின் சமூக சிந்தனை. சுற்றுப்புறத்தை சுட்டிக்காட்டும் எழுத்துக்கள். உதாரணம்: தூறல் நேரத்தில், பெண்கள் கூடைகளைக் கவிழ்த்து உட்கார்ந்திருந்தனர்.

குறை: எழுத்துப்பிழைகள். களம் - எம்.ஜி.ஆர் காலம் என்று இந்த ஜெனரேசனால் கருதப்படும் ஊர் வாய்கால் பிரச்சனைகள், அறிவுரை தீம்.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வசந்த்.

10. வாசம்

^^^^^^^^^

அட .. ஆச்சரியப்பட வைத்திருக்கிறார், கதாசிரியர் வசந்த். இது நடக்குமா? இது உண்மையா? இந்த லாஜிக்கெல்லாம் தூக்கி அந்தப்பக்கம் வைங்க. படிச்சுப்பாருங்க. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்! ஒரு இனிமையான குடும்பத்தினை கண்முன் படமிட்டு காண்பித்திருக்கிறார் ஆசிரியர்.

"குழந்தைகள் இருவரும் ஆச்சரியமடைந்து, அவளைக் கட்டிக் கொண்டு, ஆளுக்கொரு கன்னத்தில் முத்தம் கொடுத்தனர். 'என் கோட்டாவை இரவு தருகிறேன்' என்று கண்களாலேயே சொல்லி விட்டு பெட்டியைப் பார்த்தேன்."

வாசம் - மணக்கத்தான் செய்கிறது.

படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் வசந்த்.

(தொடரும்)

8 comments:

வலைஞன் said...

விரிவான விமர்சனங்களுக்கு நன்றி.
அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள்

பதிவு தமிழ்மணத்தில் வரவில்லையே?
படைப்புகளுக்கு முடிந்தால் நேரடிச் சுட்டி கொடுக்க முயலுங்கள். அப்படிச் செய்தால் இந்தப்பதிவின் இணைப்புச்சுட்டி தானாகவே படைப்பாளர்களின் பதிவில் (trackback) உருவாகும்.

என் படைப்புகளுக்கான நேரடிச்சுட்டி இதோ:
இவற்றை விமர்சனப் பகுதியில் தொடுப்பாக இணைத்தால் (trackback) சுட்டி என்பதிவில் வரும்.

கவிதை -தேன்கூடுபோட்டிக்கு-1
http://akaravalai.blogspot.com/2006/10/1.html

ஒருவரிக்கதை -தேன்கூடுபோட்டிக்கு-2
http://akaravalai.blogspot.com/2006/10/2.html

இருவரிக்கதை -தேன்கூடுபோட்டிக்கு-3
http://akaravalai.blogspot.com/2006/10/3.html

கதைக்கவிதை -தேன்கூடுபோட்டிக்கு-4
http://akaravalai.blogspot.com/2006/10/4.html

வலைஞன் said...

//நியூஸ். - இன்னிக்குதாங்க விடுதலை. பாவம், இன்னிக்கின்னு பார்த்து செத்துட்டான். - இதான் விசயம். ஆயுள் தண்டனைக்கைதி? சிறைக்கதவு திறக்கப்படும் முன்பே? இதெல்லாம் கதைக்கான இடைச் சொறுகல்//

இங்கே ஒரு விளக்கம்.
செய்தி அவ்வளவு தான். ஆனால் அது சிறுகதையாவதற்கான கரு ஆயுள் தண்டனைக்கைதி என்பதில் தானே இருக்கிறது. ஆனால் வாசிப்பவர் மனதில் அவன் கைதியாவதற்கான காரணங்களை சிந்திக்க வைப்பதற்கு போதுமான அழுத்தம் இல்லாத காரணத்தால்தான் இடைச்செருகலாக தோன்றியிருக்கக்கூடும்.
'சிறைக்கதவு திறக்கப்படும் முன்பே' என்பது கதை நிகழ்வுக்கான வரிகள்தான்

yata said...

நன்றி வலைஞன். தமிழ்மணத்தில் இணைக்க முயற்சித்தேன். ஆனால் பீட்டாவிற்கு மாறியதனாலோ என்னவோ இடுகையை இணைக்கும் போது, பிழை செய்தி வருகிறது.

நேரடி சுட்டி ஐடியாவிற்கு நன்றி. இப்பொழுது இணைத்திருக்கிறேன்.

yata said...

//கடவுள் மறுக்கும் தகப்பனும் இக்தகைய பெயர் போன்ற குறீயிட்டுக்குள் முடங்கி போகிறார்.//

அட, நிறைய யோசிச்சு எழுதியிருக்கீங்க. சாரிங்க நிர்மல், இதெல்லாம் எனக்கு ஏனோ ஸ்ட்ரைக் ஆகலீங்க:-( அடுத்த தபா கவனமா இருக்க முயற்சிக்கிறேன்.
விளக்கத்துக்கு ரொம்ப நன்றிங்க.

இரா. வசந்த குமார். said...

தெளிவான விமர்சனங்களுக்கு நன்றிங்க. மன்னிச்சுக்குங்க, கொஞ்சம் ஆர்வத்துல அடிச்சதுல, கொஞ்சம் எழுத்துப் பிழைகள் வந்திடுச்சுங்க. இனிமேல வராம பாத்துக்கறேங்க. சுளுவா எம்.ஜி.ஆர் காலத்துப் பிரச்னைனு சொல்லிட்டீங்க.. நம்ம ஊர்ப் பக்கமெல்லாம் வந்து பாருங்க. மழை இல்லாத காலத்துல எல்லாம் எந்த அளவுக்கு விவகாரம் வெடிக்கும்னு. வாழ்த்துக்கள்ங்க..!

வல்லிசிம்ஹன் said...

யதா, விமரிசனம், மிக்க கரிசனத்தோடு வந்து இருக்கிறது.

நீங்கள் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை.கீபோர்டைக் குறை சொல்ல மாட்டேன்.:-0)

எழுத இன்னும் பயிற்சி டேவை. இந்த சம்பவம் நடந்ததுதான்.
எத்டனையோ நபர்களுக்கு உதவிய திருமதி.சிவசங்கரி கதை படமானபோது அதையும் பார்த்து அந்தப் பெண் அழுதாள்.

படம் ஒரு மனிதனின் கதை.
வெகு நன்றாகப் படைக்கப்பட்டிருந்தது.

நன்றி யதா.
ஏழிசை(வல்லிசிம்ஹன்)

பழூர் கார்த்தி said...

அட்டகாசமான ஆரம்பம், தொடர்ந்து கலக்குங்கள் !! வாழ்த்துக்கள் !!

***

//இத்தகைய விமர்சனங்கள் எழுதலாம் என்ற எண்ணத்திற்கு முன்னோடியாக இருந்த சோம்பேறிப் பையனுக்கு என் வணக்கங்கள்.//

நன்றி.. எனக்கு தூண்டுதலாக இருந்தவர் குருநாதர் பாஸ்டன் பாலா.. இந்நேரத்தில் அவரையும் நினைவு கூரக் கடமைப் பட்டிருக்கிறேன் !!

***

படைப்பில் சில மாற்றங்களையும் சஜஸ்ட் செய்வது, ரசிக்க வைக்கிறது...

அடுத்தடுத்த பகுதிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் !!

சிறில் அலெக்ஸ் said...

விமர்சனத்துக்கு நன்றி. நல்லா அலசியிருக்கீங்க வாழ்த்துக்கள்.