10/08/2006

தேன்கூடு அக்-06 படைப்புகள் விமர்சனம் 11 to 20

'ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்' என்ற கேள்விக்கு என்னுடைய பதில், உண்மையானதாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

விமர்சனங்கள் எப்பொழுதும் ஒரு பக்கத்தை மட்டுமே பிரதிபலிப்பவை. எனக்குத் தெரிந்தது, என் கண்ணோட்டத்தில் இப்படி, என்ற விதத்தில் எழுதப்படுபவை. ஆனாலும் இதனை ஒத்துக்கொள்ளாமல், நான் அறிந்ததை வைத்து எழுதப்படும் விமர்சனமே முடிவிலும் முடிவானது என்று வாக்குவாதம் செய்பவர்கள் ஏராளம்.

எப்படி ஒரு படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பிலும் தன்னைத் தானே காண்கிறானோ அதே போல, விமர்சனங்களிலும் எழுதுபவன் தன்னையே காண்கிறான். இப்படிச் செய்யப்படும் விமர்சனங்கள் பிறருக்காக திருத்தி எழுதப்பட்டால் அது சரியான விமர்சனமாகுமா? இந்த கேள்விக்கு பதில் அனைவருக்கும் தெரியும், ஆகாதென்று. சரியோ தவறோ தெரிந்ததைச் சொல்லி, தவறை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது.

இனி, அடுத்த பத்து படைப்புகளுக்குள் நுழைகிறேன்.

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகள் இங்கு.

********
11. தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ரயில் பயணம். சிறுவனுக்கு ஊட்டும் தாய். நினைவலைகள் பின்னோக்கி பறக்கிறது. கடைசி பாராவில் ட்விஸ்ட் வைக்கிறார். படிக்கக் கூடிய சிறுகதைகளில் ஒன்று. ஆசிரியர் சுவாரசியமாக எழுதியிருக்கிறார். படித்து முடித்த பிறகு சற்றே சிந்திக்க வைக்கிறது இந்த கதை. நேரடியான உணர்வுகளைத் தராமல், தள்ளி நின்று யோசிக்க வைக்கிறது. பால் மாறுவதனால் ஏற்படும் அதிர்ச்சி குறைய சில நிமிடங்களாகும். இது எழுத்தாசிரியரின் வெற்றி.

நிறை: சுவையான சில வாக்கியப் பயன்பாடுகள். லேசாகக் கண்ணீர்க் கோடு வழிந்து ரயில் காற்றில் உடனே காய்ந்து போனது. காக்கைக் கூட்டிலிருந்து விடுதலை வாங்கிய குயில் குஞ்சுகளாய். போன்றவை.

குறை: ஆசிரியர், வாக்கிய அமைப்பில் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். பல இடங்களில் இடறல்கள் உண்டு. நிறுத்தல் குறிகள் உபயோகப்படுத்துவதிலும் சில இடங்களில் தடங்கல்கள்.
எழுத்துப்பிழைகளையும் தவிர்க்கலாம்.
//தெருமுக்கு// - பிரித்து எழுதியிருந்தால் தெளிவாகப் புரியும்.
//உறைத்த சண்டாளச் சட்டியினோடு // - உறைக்கும் சண்டாளச் சட்டினியினோடு என்று இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
//இருக்குமாதலாம் // - இருக்குமாதலால்

வாழ்த்துக்கள் ராகவன்.

12. அப்பாவி அடிமைகளுக்கு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கட்டாயம் படிக்க வேண்டிய ஆக்கங்களில் ஒன்று. வித்தியாசமான படைப்பும் கூட. அப்பாவி மனிதனின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தடங்கல்கள் தடைகள் சிறைகள். இதிலிருந்து இவர்களுக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும் என்ற கேள்வியை முன்னிருத்துகிறார் ஆசிரியர். இந்த படைப்பின் ஹை-லைட் ஒவ்வொரு சூழ்நிலையையும் பேச்சை வைத்தே புரியவைப்பது.

அப்பாவி அடிமைகள் - இந்த அடிமைத் தலையிலிருந்து விடுதலை என்பது இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதுமே இல்லை என்பதுதான் படைப்பின் விசேசம்.

வாழ்த்துக்கள் லக்கிலுக்.

13.
ஜெனி - சிறுகதை
^^^^^^^^^^^^^^^^^^^

கலை இலக்கியத் துறைகளில் பெரும்பாலான படைப்புகளின் வெற்றிக்கு பல நேரங்களில் காரணமாக இருப்பவை, தாக்கங்கள். இந்த தாக்கங்களில் மிக முக்கிய தாக்கம் 'காதல்' அல்லது 'காதல் தோல்வி'. தன்னில் இருந்த காதலை எழுத்தாளன் மிகத் திறமையாக வெளிப்படுத்தத் தெரிந்தவன். அதனால்தான் இன்றும் காதல் குறித்து ஏராளமான படைப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

எழுத்தாள காதலனிடம், காதலி என்னைப் பற்றி எழுதக்கூடாதென்று சொல்லிவிட, இன்று எழுத்தாளன் ஒரு விஞ்ஞானக்கதாசிரியனாகி வெற்றியும் பெற்றிருக்கிறான் என்கிறார் ஆசிரியர். காதலி, கதாநாயகிடம், 'உன்னுடைய எழுத்துலகிலிருந்து விடுதலை கொடு' என்று சொல்வதுதான் ஹைலைட். படிக்கக் கூடிய சிறுகதைகளில் ஒன்று

நிறை: காதலி, காதலனிடம் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் நிஜவாழ்க்கையின் நிதர்சனங்கள்.
இந்த பகுதியினை இவ்வளவு சரளமாக எழுதியதற்கு ஆசியருக்கு ஒரு ஷொட்டு கொடுக்க வேண்டும்.

குறை: பழைய சந்திரபாபு(?) என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இருபது வருடங்களுக்கு முன்னர் அவர் பழைய சந்திரபாபுவாக கருதப்பட்டிருந்தால், இதுசரியாக இருக்கலாம்.
நிறுத்தற்குறிகள் சுத்தமாக இல்லை. ஒவ்வொரு பேச்சின் முன்னும் பின்னும் "" போன்ற குறியீடுகளை இட்டு தனித்துக் காண்பிக்கச் செய்வது வழக்கமான எழுதும் முறை. இதனை ஆசிரியர் மிக நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக கீழ்கண்ட விதத்தில் எழுதுவது படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்:

"எக்ஸ்-க்யூஸ் மீ சார்.. உங்க ஆர்டர்" - என்று பேக்கரி பையன் பப்ஸையும் ஜூசையும் டேபிளில் கொண்டு வந்து வைத்தான்.
"ஜெனி என்ன சாப்பிடுற?" - அவள் பதில் எதிர் பாராமாலே அவளுக்குப் பிடித்த ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்தான். 1

காதல் மட்டுமே கொண்டு சமூதாயக் கதைகள் எழுதப்படுவதில்லை.. என்று மறுக்கும் எண்ணமும் வருகிறது! இருப்பினும், இதில் தவறில்லையென்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் வினையூக்கி.



14. விடுதலைத் திரு நாளில்...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


வசந்த் அவர்களிடமிருந்து மீண்டும் ஒரு வித்தியாசமான கோணத்தில் ஆக்கம். சுவாரசியமே இல்லாமல் படிக்க ஆரம்பித்தாலும், நடுவில் ஒரு பிடி கிடைத்து, கடைசியில் முடிக்கும் போது முகத்தில் ஒரு புன்னகையை நிச்சயம் வரவழைக்கிறது. ஒவ்வொரு படைப்பிலும் ஆசிரியர் வித்தியாசம் காட்டுவது பாராட்டப்பட வேண்டியது.

வாழ்த்துக்கள் வசந்த்.


15. நினைக்க மறந்த கவிதை


பள்ளியில் படிக்கும் காலங்களில் பூனை கதை படித்திருப்பீர்கள். தன் கண்ணை மூடிக்கொண்ட பூனை உலகமே இருண்டு விட்டதாக நினைத்ததாம். எதற்காக அந்த கதை என்று அப்பொழுது முழுமையாகப் புரியவில்லை. மனித மனதின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்றும் இதுதான் என்பதும் அறிந்திருக்கவில்லை.

ஒவ்வொருவரும் ஒரு உலகமே. தன்னைச் சுற்றியுள்ள உலகில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விடுதலைக்கு ஆசைப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கதையிலும் நடக்க இயலாத கதா நாயகி தனக்கு மட்டும் விடுதலை கிடைத்தால் என்னென்ன செய்வார் என்பதைச் சொல்லி ஒவ்வொருவரின் அடிமனது ஆசைகளையும் தொட்டு எழுப்பியிருக்கிறார்.

நிறை - சரளமான நடை. கதாநாயகியின் ஆசை. கடைசி பத்தியில் மட்டுமே தெரியவரும் கதாநாயகியின் முடம். அதனால் ஏற்படும் ஆச்சரியம்.

என் கருத்து: இன்னமும் அழுத்தமாக சில விசயங்களைச் சொல்லியிருக்கலாம். எந்த வருடத்தின் படிப்பு. இந்த வயசில் இந்தளவுக்கு மெச்சூரிட்டி இருக்குமா? முதல் வரியைச் சொன்னவுடன் வகுப்பு மவுனமாகிறது என்பதை அப்சர்வ் செய்கிறாள், "அவங்க செய்ய வேண்டியதெல்லாம், அவர்களை அழுத்தும் அந்த அபிப்பிராயங்களை வெட்ட வேண்டியது மட்டும் தான்." என்பதையெல்லாம் படிக்கும் போது, கொஞ்சம் பெரிய வயதினைச் சேர்ந்தவரோ அல்லது ஆசிரியையோ என்று எண்ணத்தோன்றுகிறது. கதாப்பாத்திரத்தின் அறிமுகம் கொடுப்பதில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் தந்திருக்கலாம் எனத் தோன்றுவது தவிர்க்கமுடியவில்லை.

வாழ்த்துக்கள் பொன். சிதம்பரகுமாரி.

16. உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன் .
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஆளாளுக்கு பக்கம் பக்கமாக எழுதியும் புரியாத அல்லது புரிந்து கொள்ள குழப்பமான விசயம் ஒரு கார்டூன் மூலமாக மட்டும் புரிந்து கொள்ளப்பட்டு விடும் என்று சொல்வார்கள். இதனை பல முறை நான் புரிந்து ரசித்திருக்கிறேன். விகடனாகட்டும், குமுதமாகட்டும் தலையங்கம் பக்கத்தின் அருகில் இருக்கும் கார்டூன்களைத் தான் கண்கள் முதலில் நோட்டமிடும். அதுவும் தேர்தல் நேரமென்றால் கேட்கவே வேண்டாம். கழுதை, குதிரை என்று படம் வரைந்து பெயர் குறித்து கலக்கிவிடுவார்கள்.

சோம்பேறி பையன் இந்த போட்டிக்கு டைமிங்காக ஒரு கார்டூன் வரைந்து அனுப்பியிருக்கிறார். இன்றைய உள்ளாட்சி தேர்தல், தமிழகத்தைப் சிறை பிடித்திருக்கும் சிக்கன்குனியா, 'இதிலிருந்து முதல்ல விடுதலை வாங்கிக்குடுங்க... அப்புறம் டிவி குடுக்கலாம்' என்கிறார்.

நிறை - சிந்தனை. கார்டூன். முயற்சி.
ஆரம்ப கட்ட முயற்சியென்பதால், குறைசொல்ல எதுவுமில்லை. ஒரேயொரு கமெண்ட் மட்டும்...

ராசுக்குட்டி: முதல் முயற்சி நன்றாக உள்ளது, தொடர்ந்து வரையுங்கள்...சித்திரமும் கைப்பழக்கம் ;-)

வாழ்த்துக்கள் சோம்பேறி பையன்.

17. விடு தலை
^^^^^^^^^^^^^

டாப் கிளாஸ் கட்டுரை ஒன்றை படிக்க பொறுமை இருந்ததெனில் இந்த கட்டுரையை நீங்கள் கட்டாயம் படிக்கலாம். ஆரம்ப கட்டத்தில் தத்துவ விசாரம் போலத் தோன்றினாலும், போகப்போகச் சூடு பிடித்து கடைசியில் முழு வேகத்தில் முடிக்கிறார். தலைப்பை விடுதலை என்று எழுதாமல் "விடு தலை" என்று பிரித்து எழுதி, அதற்கும் கட்டுரையின் முடிவில் பஞ்ச் வைத்திருக்கிறார்.

பிளேட்டோ, காந்தி, நேதாஜியின் சிறுவர் படை, பாரதியின் தில், லால் பகதூர் சாஸ்த்ரி என்று பலரையும் தொடும் இவர், கடைசியில் காமராஜரையும் குறிப்பிடுகிறார். முக்கியமாக நேதாஜியின் சிறுவர் படை குறித்த நிகழ்ச்சி நான் இதுவரை அறிந்ததில்லை. இனி பல காலம் நினைவில் இருக்கும்.

நிறை : அருமையான கட்டுரை. ஏராளமான மேற்கோள்கள்.
குறை : சுதந்திரம் - விடுதலை என்ற இரண்டிற்குள் உள்ள தொடர்பு ஓரளவிற்குச் சொல்லப்பட்டாலும், சுதந்திரம் என்பதே விஞ்சி நிற்பதாக ஒரு எண்ணம். இருப்பினும், கட்டுரையின் நோக்கம், எழுத்து, கருத்து இவற்றை மனதில் வைத்து, இதனை நான் சிறு குறையாகவே பார்க்கிறேன்.

படைப்பிற்கு வாழ்த்துக்கள் சைதை முரளி

18. விடுதலையா வாழ்க்கை ?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


அலுவலக வாழ்க்கை என்பது பல நேரங்களில் இனிமையாக இருப்பதும் இல்லாமல் போவதும் கிடைக்கப்போகும் சூப்பரவைசரைப் பொருத்தது என்று சொன்னால் நிச்சயம் மிகையாக இருக்காது.அதிலும் அந்த சூப்பரவைசர் நண்பரைப் போல் பழகுவார் என்றால் அந்த அலுவலக நேரமே மகிழ்ச்சிகரமானதாக மாறிவிடும். சில நேரங்களில் கட்டுப்பாடான மேனேஜர்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் போவதும் ஏற்படுவதுண்டு; கண்டிப்பான அப்பாவைப் புரிந்துகொள்ளத் தவறும் மகவு போல.

சமீபத்திய ட்ரெண்ட் படி, தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தேவைகளுக்கு மிகவும் அதிக மதிப்பு கொடுக்க வேண்டுமென்பது 'நல்ல மேனேஜர்'களின் கடமையாகக் கருத்தப்படுகிறது.

கதையில் வரும் இந்த மேனேஜர் - கொடுமைக்காரர் என்று கதாநாயகன் கருதுகிறார். ஆனால் புது மேனேஜர் வந்த பிறகுதான் பழைய மேனேஜரின் அருமை புரிகிறது.

ஒருவரியில் : தெரியாத பேயை விட தெரிந்த பிசாசே மேல். என்று சொல்லும் கதை.

நிறை - வேகமாக படிக்க முடிகிறது. சுவாரஸியமாக எழுதப்பட்டிருக்கிறது. முக்கியமாக புது மேனேஜரின் ஒவ்வொரு கண்டிசனும், பழைய மேனேஜரின் கண்டிசனைத் தூக்கி சாப்பிட்டிருப்பதாக எழுதியிருப்பது சுவையாக இருக்கிறது.

குறை - .. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கதையின் தலைப்பைத் தொடுகிறார். கடைசி வரியிலும் பஞ்ச் வைத்திருக்கலாம். உதாரணத்திற்கு, எங்கோ எப்.எம் ரேடியோவில் 'விடுதலையா வாழ்க்கை' என்ற பாபா பாடல் ஒலித்தது. என்பது போல.. (இது உண்மையில் குறையென்று சொல்ல இயலாது). மிக முக்கிய குறை, கதையின் ஓவர் சிம்ப்ளிசிட்டி. அடுத்த மேனேஜர் இப்படித்தான் செய்வார் என்பது தெளிவாக படிப்பவருக்குப் புரிந்துவிடுகிறது. அதுவும் முதல் கண்டிசன் போட்டவுடனேயே கதை முடிவுக்கு வந்துவிடுகிறது.

வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்

19. தேன்கூடு போட்டி/விடுதலை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சன்னியாசம் பெற்றுக்கொள்வது என்பது 'ஓடிப்போவது' போல அனைவருக்கும் மிகப் பழக்கமான ஒன்றாக மாறிவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. அதுவும் சமீபத்திய படங்கள், மின்சாரக்கனவு, ஹேராம், பாரதி போன்றவை முதல் முந்தைய படங்கள் வரை சன்னியாசம் குறித்து அவ்வப்போது ஏதாவது இருந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய தேதியில் சாமியாராவது என்பது சுலபமில்லை; நிறைய பெண்களை வைத்து மேய்க்க வேண்டும் - இது ஒரு திரும்பத்திரும்ப எழுதப்படும் க்ளிஷே ஜோக்.

சன்னியாச வாழ்க்கை விரும்பும், ஒரு இளைஞனின் கதையைச் சொல்கிறார் முரளிதரன்.

என்னைப் பொருத்த வரை, நிறைகளை விட, இந்த கதையில் குறைகளே அதிகம். அக்கரைக்கும் இக்கரைக்கும் தாவும் எழுத்து. முதல் பாதியில் வரும் நண்பர்களிடையேயான பேச்சு படிக்க சுவாரசியமாக இருந்தாலும், டக்-கென்று முடிந்துவிடுகிறது. அழுத்தமான காரணம் இல்லாமல்(அல்லது தெரியவராமல்) சன்னியாசம் வாங்கச் செல்லும் நாயகன். அதே போல அழுத்தமான காரணம் இல்லாமல் வைராக்கியத்தை விடுகிறார். போதாத குறைக்கு, தாமரை இலை தண்ணீர் டயலாக் வேறு. நிறுத்தற்குறிகள் சுத்தமாக இல்லாததால் படிப்பதற்கும் சிரமம்.

மேற் சொன்ன கருத்துக்களைக் குறித்து வருத்தப்படாமல், அடுத்து வரும் ஆக்கங்களில் ஆசிரியர் சிறப்பாக செய்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள் முரளிதரன்.

20. எனக்கு எப்போ விடுதலை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

விடுதலை என்பது எதிலிருந்து என்பது எப்பொழுதும் ரிலேட்டிவ் என்று முன்னரே சொல்லியிருந்தேன். அந்த எண்ணத்திற்கு மிக மிக நெருக்கமான ஒரு கதை இது. கட்டாயம் படிக்க வேண்டிய கதை. இலங்கைத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த கதையும், கதை மாந்தர்களும் நெருக்கமாக உணர வைத்தது ஆசிரியரின் திறமை. கதையின் ஆரம்பமாகட்டும் முடிவாகட்டும், சரியான விதத்தில் செதுக்கப்பட்டிருக்கிறது. தவறாமல் படியுங்கள்.

வாழ்த்துக்கள் மயூரேசன்.

(தொடரும்)

3 comments:

பழூர் கார்த்தி said...

கார்ட்டூனைப் பற்றிய உங்கள் விமர்சனத்திற்கும், கருத்திற்கும் நன்றி !

***

ஒவ்வோர் படைப்பிலும், நிகழ்வை சுற்றிய உங்கள் அனுபவம்/கருத்து சுவராசியம்... தொடருங்கள்..

***

நிறைய நேரமும், உழைப்பும் தேவைப்படும் விமர்சன பதிவுகளில்,
பொறுமையாக, அருமையாகவும் படைப்பதற்கு பாராட்டுக்கள் !!

லக்கிலுக் said...

விமர்சனத்துக்கு நன்றி....

சென்றமுறை சோம்பேறிப் பையன் சிறப்பாக விமர்சித்திருந்தார்.... இந்த முறை யார் விமர்சிப்பார்களோ என்று ஏங்கிக் கிடந்த நேரத்தில் நம்பிக்கை நட்சத்திரமாய் வந்திருக்கிறீர்கள்...

Jay said...

Thanks for your comment on my story.. Thanks alot..