2/11/2006

நீர்க்குமிழிகள்

வார்த்தைகள் வெறும் நீர்க்குமிழிகள், செயல்களே தங்கத் துளிகள்.

படிக்கும் போதே.. உள்ளுக்குள் தோன்றும் வார்த்தைக் குமிழிகள் உடைந்து போவது போலத் தோன்றவில்லையா என்ன?! ஆனால் என்ன.. அனுபவித்துப்படிக்க வேண்டும்...!

நம்மில் பலர் வார்த்தைகளை அதிகம் இறைத்துவிட்டு, அவசரப்பட்டு விட்டுவிட்டு திண்டாடுபவர்கள். இந்த திண்டாட்டம், எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான். சில தினங்களுக்குப்பிறகு, இந்த திண்டாட்டம், வருத்தப்படுகின்ற நிலைக்கு வந்த பிறகாவது சிலர் திருந்துவதுண்டு.

மனிதர்களாயிற்றே, திரும்பவும் திரும்பவும் தவறு செய்வது இயல்பாயிற்றே. அறிந்ததை மறந்துவிட்டு, திரும்பவும், தவறு செய்வார்கள். வார்த்தைகளை இறைப்பார்கள். இந்த குணத்திலிருந்து வெளிவரவேண்டிய அவசியம் வெற்றிபெற விரும்பும் எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு.

மெளனம்... பேச்சுக்கள் அற்ற அந்த மவுன நிலையை ஆன்மீகவாதிகள் விரும்புவது போலவே நானும் விரும்புகின்றேன். செயல்களாக என் வாழ்க்கை எப்பொழுதும் அமைந்துவிடக்கூடாதா என்ற எண்ணம் அவ்வப்போது வராமல் இருப்பதில்லை!

மொட்டைமாடி தனிமையில், இரவு நேரத்தின் குளுமையில் மல்லாந்து படுத்துக் கொண்டு வான் பார்க்கும் நேரம் எங்கிருந்துதான் இத்தனை மன ஒருமைப்பாடும் வெற்றிக்கு தேடும் மனநிலையும் வருமோ தெரியவில்லை, காலையில் எழுந்து தினசரி வேலைகள் செய்ய ஆரம்பித்தவுடன் அது காணாமல்தான் போய்விடுகிறது. ஆனாலும் எண்ணங்களே வாழ்க்கையாக உருமாறுகின்றன என்று பலர் எழுதியிருக்கிறார்கள். என்றேனும் இந்த எண்ணங்களும் உருமாறும் என்ற நம்பிக்கை, தினப்படித் தடைகளையும் மீறி, தடைபோடும் உறவுகளையும் மீறி, முடிவுக்கு வந்துவிட்ட அலட்சியப்பார்வை வீசும் நெருக்கமானவர்களையும் மீறி தள்ளி நின்று ஆச்சரியப்பட வைக்க முடியும் என்றே தோன்றுகிறது.

ஆனால், அதற்கு இன்னும் எத்தனையோ காலம் செல்ல வேண்டும்.
ஒரு வேளை வாழ்க்கை முழுமையுமே ஆகலாம்!

--
மேலே எழுதிய சிந்தனை 'முகரம்' தினத்தன்று எழுதி வைத்தது. இன்று காலையில் வேறொரு பொன்மொழி கண்ணில் பட்டது. அது....

தெரிந்ததை சொல்லிவிடாதே.. முடிந்ததை செய்துவிடாதே!

வேடிக்கைதான். நேற்று எழுந்த சிந்தனைக்கு முற்றிலும் மாற்றல்லவா இது?! ஒருவேளை கவனமாக இருக்கச்சொல்கிறார்களோ?! கொஞ்சம் விகர்ப்பமாக சிந்தித்தால் இந்த கருத்து, எல்லாரிடமும் அவர்களையும் அறியாமல் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. படிப்பவர்களாகட்டும், வேலையில் இருப்பவர்களாகட்டும், எல்லோரிடமும் இப்படி ஒரு எண்ணம் கண்டிருக்கிறேன். தெரிந்ததை சொன்னால் அவர்கள் மதிப்பு போய்விடும் என்று எண்ணுவார்கள். ஆனால், இது ஒன்றும் அவ்வளவு சிலாக்கியத்தக்க குணமில்லை. ஒருவர் சொல்லாவிட்டால், இன்னொருவர்! அவருமில்லாவிட்டால் வேறொருவர். இதில் எங்கிருந்து வந்தது சொல்லாமல் இருந்தால் மதிப்பு என்பது. என்ன முன்னே பின்னே கொஞ்ச காலம் ஆகும் ஒருவர் தெரிந்துகொள்ளுவதற்கு. அவ்வளவுதானே!?

அதிலும், முடிந்ததை செய்துவிடாதே...! ஏன்? எனக்கென்னமோ இந்த வரிகளில் உடன்பாடில்லை.

2/08/2006

பிழைப்பைத் தேடி

கெட்டிக்காரன் பிழைப்பதற்காக எட்டு ஊருக்குச் செல்வான்.

நிச்சயம் கவனிக்க வேண்டிய கருத்துதான். ஒரு சிறு புன்னகையை வரவைக்கும், இதை படிப்பவர்கள் வெளிஊருக்கோ அல்லது முக்கியமாக வெளி நாட்டிற்கோ சென்று வேலைசெய்பவர்களாக இருந்தால்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லிய தமிழ் பரம்பரை, இது குறித்து பல காலங்களுக்கு முன்னரே தெளிவாகத்தான் இருந்திருக்கிறது. பட்டினத்தாரின் கதையாகட்டும், அல்லது காரைக்கால் அம்மையார் கதையாகட்டும், அல்லது முந்தைய சரித்திரமாகட்டும், எட்டு திக்கும் சென்று திரைகடலோடி திரவியம் தேடுபவர்கள் கெட்டிக்காரர்களாகத்தான் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைக்கும், ஒரு சிறுவன் வளரும் பருவத்திலேயே அவனை வெளிநாடு அனுப்பி வைக்கும் எண்ணத்துடன் வளர்க்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டாலும், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால், இந்திய இளைஞன் தவறாமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு அர்த்தம், தாய்நாட்டின் மீது பற்று இல்லாமல் என்பது அல்ல. இன்றைய உலகில் பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை எல்லோருக்குமே அதிகம், அது மட்டுமல்லாது வெளிநாடு செல்லும் இளைஞர் மற்றும் இளைஞியர் பார்வையும் விசாலமாகிறது. இந்த விசாலமான பார்வை நாளைய இந்தியாவிற்கு கட்டாயம் உதவி செய்யும்.

2/07/2006

தடைகள் உடைக்கப்படட்டும்

பல தடைகளை உடைப்பவனே வாழ்க்கையில் முன்னேறுவான்.

தடைகள்... உடைப்பது என்பது ஒரு சவால். எந்த தடையாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படிப்பட்ட தடையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த தடைகளைத் தாண்டித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு மனநிலைக்கு ஒரு மனிதன் தன்னைத்தானே தயார் படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். இந்த கருத்தில், ஒரு தடையோடு நின்று விடச்சொல்லவில்லை. பல தடைகளை உடைப்பவனே வாழ்க்கையில் முன்னேறுவான் என்று சொல்லப்படுகிறது. அதாவது, பல தடைகளை எதிர்பார்க்க வேண்டும் என்பதும் அப்படி தடைகள் வரும் என்பதும் தடைகள் இல்லாத வெற்றி என்பது இல்லை என்பதும் சொல்லாமல் சொல்லப்படுகிறது.

இங்கே மிகவும் முக்கியமான வார்த்தையாக எனக்குத் தோன்றுவது 'உடைப்பது'! சாதாரணமாக சொல்பவர்களும், பேசுபவர்களும், தாண்டுவது என்ற வார்த்தையைத்தான் உபயோகிப்பார்கள். ஆனால், உடைப்பது என்ற வார்த்தையை உள்வாங்கிப்பார்த்தால், அந்த சிந்தனையே தடைகளை தெரிக்கச் செய்ய வேண்டும் என்ற அழுத்தமான எண்ணத்தினை உருவாக்கும். அதுதான் தமிழ் வார்த்தைகளின் பலம்!

- எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது, கண்ணெதிரே பிரச்சனைகளை கற்பனை செய்துகொண்டு அந்த பிரச்சனைகளை உடைத்து எரிவது போல கற்பனை செய்துபார்த்தால், அந்த எண்ணமே நம்மை சரியான பாதைக்கு அழைத்துச்செல்லக்கூடும்.

2/06/2006

உதவாக்கரை

மகனை ஒன்றுக்கும் உதவாதவனாக வளர்த்தால் திருடனாவான்.

- இன்று படித்த கருத்து இது. ம்... என்ன அர்த்தம் இதற்கு? வளர்ப்பது என்பது நம் கையில் இருப்பது போலத்தோன்றினாலும் வளர்வது என்பது சுற்றுப்புறம் மற்றும் நண்பர்கள் என்று முற்றிலும் அவர்கள் கையிலேயே தானே இருக்கிறது!

- நண்பர் ஒருவரின் பையனுக்கு நல்ல படிப்பும் வாழ்க்கைக்கான எல்லா உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார், ஆனாலும் அவன் திருடனானான். ஏன்? இது வளர்ப்பில் மட்டுமுள்ள குறைபாடல்ல.. அதனையும் தாண்டி ஏதோ ஒன்றிருக்கிறது.

- இந்த ஒரு கருத்தைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் முக்கியமாக குழந்தைகள் இருப்பவர்களுக்கு சுருக்கென்று தோன்றுமா இல்லையா? ஒரு வேளை குறைந்த பட்ச கவனிப்பாகவது குழந்தைகளுக்கு கொடுக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு கருத்து எழுதப்பட்டிருக்கிறதோ?

- பாபா படத்தில் ரஜினி ஏதோ ஒரு யோசனை செய்வது போல சில வரிகள் வரும். கிட்டத்தட்ட இதே கருத்துடன்.

- பாபா படத்தின் வசனகர்த்தா 'எஸ்.ரா' வாம். வலைப்பதிவுகளைப் படிக்கும் போது தெரிந்தது! எனக்கு மிகவும் பிடித்த வசனங்கள் பல அந்த படத்தில் இருந்தது. முக்கியமாக ரஜினியின் உள்மன நிலையை அப்படியே பிரதிபலித்த படம் அது.

2/05/2006

கோழையும் எழுச்சியும்

கோழையை எழுச்சி பெறச் செய்தால் பேயோடும் போராடுவான்.

- அடேங்கப்பா, என்ன ஒரு அருமையான கருத்து இது. இதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வார்த்தை 'எழுச்சி'. அதுவும் கோழையின் எழுச்சி. கோழை என்றால் யார்? பயப்படுபவர்களை கோழை என்று சொல்வார்கள். எதற்கு பயப்படுபவர்கள், ஒரு செயலைச் செய்வதற்கோ அல்லது முன்னேற்றத்திற்கான போராட்டத்திலிருந்து விலகுபவர்களையோ கோழை என்பார்கள். ஆனால் இங்கு, கோழை ஒருவனை எழுச்சி பெறச் செய்தால், பேயோடு கூட போராடுவான் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. பேய் என்பது மனித மனதின் ஆழமான ஒரு பயமாக முன் வைக்கப்படுகிறது. அதனோடே போராடக்கூடியவனாக ஒரு கோழை மாற முடியும் என்றால், எதனோடும் அவன் போராடுவான் என்பது பொருள்.

ஒருவேளை நாமே (நம்மையும் அறியாமல்) கோழையாக் இருந்தால் இதனை படிக்கும் போது நம்மிலும் எழுச்சி ஏற்படுவது போல ஒரு மாயை உருவாகுவது.. இந்த கருத்தின் வெற்றியோ?!

இத்தகைய எழுச்சியை கோழையாக இருக்கும் ஒருவனுக்கு உருவாக்குவது எவ்விதம்?