9/05/2006

[தேன்கூடு-போட்டி]சின்னதாக ஒரு லிப்ட்

சின்னதாக ஒரு லிப்ட்

"எனக்கு மட்டும் ஒரு சின்ன லிப்ட் கிடைச்சா எங்கியோ போயிடுவேன் சார்...!"

- அந்த தெருமுனை மொட்டைப் பாலத்தில் அவனுடன் பேசியபோது இரவு நேரத்தின் கருமையையும் தாண்டி அந்த கண்களில் ஒரு பளபளப்பு தெரிந்தது. இந்த தேசத்தின் எத்தனையோ இளைஞர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாகத்தான் அவன் எனக்குத் தோன்றினான்.

அது ஒரு சராசரியான கிராமம். சென்னையைப் போன்ற எந்த ஒரு பரபரப்பிற்கும் பழக்கமில்லாத ஊர். தெருவில் சகஜமாக அவ்வப்போது மாட்டு வண்டிகளும், எப்பொழுதாவது தூரத்தில் பேருந்தோ அல்லது லாரியோ செல்லும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த ஊர் பள்ளியின் மேற்பார்வைக்காக நான் அங்கு வந்திருந்தேன். பள்ளியின் ஹெட்மாஸ்டர் வீட்டு மாடியிலேயே ஒரு சிறு அறை ஒதுக்கித் தந்திருந்தார்கள்.

**

"இந்த காலத்து பசங்க எல்லாம் இப்படித்தான் சார். வெட்டு குத்துன்னு, இப்ப பாருங்க, இனிமேல என்ன செய்ய முடியும். தேவையா இது?" - வாட்ச்மேன் வாயில் வெற்றிலைக் குதப்பலுடன் பேசிக்கொண்டிருந்தபோது, பதில் சொல்ல
முடியாமல் வெறித்துத் தான் பார்க்க முடிந்தது எனக்கு.

**

ஸ்ரீதரன் என்ற அந்த 23 வயது இளைஞன் அந்த பள்ளியில் டெம்பரவரியாகத்தான் வேலைக்கு சேர்ந்திருந்தான். பி.காம் படித்துவிட்டு, எம்.காம் கரஸ்பாண்டென்ஸில் படித்து கொண்டிருந்தான். அப்பா அந்த ஊர் போஸ்ட் மேன். அவருக்குத் தெரியாதவர்கள் வெளியூரிலிருந்து வந்தவர்களாகத்தான் இருக்க முடியும்!

ஸ்ரீதரன் பேசுவதற்கு இனிமையானவன். ஏராளமான கனவுகளைச் சுமந்தவன்.நிறைய தன்னம்பிக்கை உடையவன். தனது தந்தையின் பாரத்தைக் குறைக்க கிடைத்த வேலைக்குச் செல்வதில் தவறில்லை என்று இந்த பள்ளியில் தற்காலிக வேலையில் இருந்தான். அவனது பேச்சும, சுத்தமும், பண்பும், மரியாதையான பழக்கமும் பார்த்தவுடன் அவனிடம் நிறைய பழக வேண்டுமென்று எனக்குத் தோன்றிவிட்டது. பள்ளியில் வேலை முடிந்து மாலை நேரத்தில் சைக்கிளில் என்னை டபுள்ஸ் வைத்து ஹெட்மாஸ்டர் வீட்டிற்கு அருகிலுள்ள மொட்டுப் பாலத்தில் இறங்கி சில மணி நேரம் பேசிக்கொண்டிருப்பது எங்களது வழக்கம். அதற்குள் இருட்ட ஆரம்பித்திருக்கும்.

'ஜெயிக்கணும் சார். இந்த உலகத்தையே ஜெய்க்கணும். நம்மால ஏதாச்சும் செய்ய முடியும். நம்மை சுத்தி இருக்கறவங்க எல்லாரையும் நல்ல நிலைக்கு நாம கொண்டு போற மாதிரி ஒரு நிலைக்கு நான் போகணும் சார். நான்னா நான் மட்டும் இல்லை. நீங்க நான் எல்லாருமே...

இந்த ஊரில பாருங்க சார். சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் அடிதடி. பிரச்சனை. ஒரு கடைக்கு மறு கடைக்கும் நடுவுல தகறாரு. அதனால வெட்டு குத்து கொலை. அதில பெருமை வேற. கள்ளன்னா சும்மாவா அப்படின்னு ஒரு
தெனாவெட்டு. இதெல்லாம் ஏன்? படிப்புதான் சார். படிப்பு கம்மியா இருக்கறதுதான் இவங்க எல்லாருமே இப்படி குறுகிய புத்தியில இருக்கக் காரணம். இந்த கிராமத்தையே மாத்தணும் சார்.

இதெல்லாம் சொல்றேன்னு என்னை ஒண்ணும் பெரிசா நினைக்காதீங்க சார். நானும் இதே குருப்தான். நானும் கள்ளந்தான் சார். இதே மாதிரி இப்படி கம்போட அலைஞ்சு எத்தினியோ பேரை நானும் அடிச்சுறுக்கேன். ஆனால், அதெல்லாம் தப்புண்ணு சொல்ல முடியாத அளவுக்கு மனசுக்குள்ள திமிரு கிடந்து ஆடுதுங்கறதும் புரியுது சார். எத்தினியோ நல்ல புத்தகங்கள படிக்கிறப்போ, எவ்வளவு தப்பு பண்றோம்கறது தெரியுறப்போ கொஞ்சம் வேதனையா இருக்கு..'

ஒரு பின் மாலை நேரத்தின் அமைதியில் ஸ்ரீதரன் பேசியதை என்னால் நீண்ட நாள் மறக்க முடியவில்லை.

***

"இப்ப எங்க இருக்காப்ல?"

"தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரியில சேர்ந்திருக்காங்கலாம். இன்னும் ஒரு வாரத்தில டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கண்ணு சொல்றாங்க!"

***

"என்ன ஸ்ரீதர், உன்னை பத்தி பசங்க ஏதோ சொல்றாங்க. யாரோ பொண்ணை டாவடிக்கிறியாம்?"

ஸ்ரீதர் முகத்தில் சட்டென்று வெட்கம் படிந்தது..

"யார் சார் சொன்னது உங்க கிட்ட?" குரலில் கொஞ்சம் அவசரமும்,இயலாமையும் இருந்தது.

"யாராயிருந்தா என்ன? விசயத்தை சொல்லு.. "

"ஆமா சார். அக்கிரகாரத்துலேர்ந்து வருது சார். நம்ம ஸ்கூலதான் டீச்சர் டிரைனிங் படிக்குது."

"அட.. என்ன ஐய்யர் ஊட்டு பொண்ணா? ஒத்து வருமா?"

"சாதியில என்ன சார் இருக்கு? எனக்கு ஒண்ணும் இல்ல. ஆனா எங்க ஐயன் ஒத்துப்பாரான்னுதான் கொஞ்சம் பயமா இருக்கு.."

அவன் முகத்தில் கவலையும், கலக்கமும் தெரிந்தது.

"அதெல்லாம் சரியாயிடும் ஸ்ரீதர். உலகத்தில எத்தினியோ பேர் இதெல்லாம் செய்யத்தான் செய்யராங்க."

"ஆமா சார். ஆனாலும் ரெண்டுபக்கமும் பிரச்சனை வரத்தான் சார் செய்யும். கீதாவுக்கு அப்பா இல்ல. இருந்தாலும், அவங்க வீட்லயும் ஆர்தடாக்ஸ் பேமிலிதான். நான் மட்டும் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு எப்படியாவது
வந்துட்டேன்னா, தைரியமா போயி பேசிடுவேன். ஸ்கூலியே பர்மனெண்டாயிட்டா கூட இப்போதைக்கு போதும்."

இந்த பிள்ளை, மனசுபோல சீக்கிரமே எல்லாம் நல்லபடியா நடக்கணும்.. இறைவா.. - என் மனசுல் இறைஞ்சுதல் தோன்றியது.

***

"ஏதோ பொம்பள பிரச்சனை போல இருக்கு சார். இவன் இறங்கி பேசறப்போ என்னமோ பேசிகிட்டானுங்க. இதெல்லாம் தேவையா சார் இவனுக்கு?"

"அடி பலம் போல.. பெரிய ப்ரச்சனையாயிடுச்சு. இவனுக்கு எதுக்குங்க தேவையில்லாத வேலை. எவனோ எவனையோ வெட்டப்போனா ஒதுங்கிட்டு போக வேண்டியதுதான். மத்தியஸ்தம் பண்றானாம். லூஸுப் பய. இப்ப யாருக்கு
ப்ரச்சனை? தேவையா இது?"

***

சென்னைக்கு வந்து நீண்ட நாட்களுக்கு ஸ்ரீதரனும் அவன் நினைவுகளும் மனதில் இருந்தது. சொந்த ஊரில் ஏற்பட்ட ஏதோ ஒரு தகறாரில் கை வெட்டுப்பட்டு தஞ்சாவூர் ஆஸுபத்திரியிலிருந்து அவன் திரும்ப வருவதற்கு முன்னதாகவே
என் வேலை முடிந்து சென்னை திரும்பி விட்டிருந்தேன். வலது கை இழந்த அவனுக்கு, வாழ்க்கையில் முன்னேற்றம் எந்த விதத்தில் வரக்கூடும்? அவன் நினைத்த வண்ணம், இனி பள்ளிக்கூட வேலையாவது பர்மனெண்ட் ஆகுமா?

இதெல்லாம் என் மனதில் சில காலம் அழைக்கழிந்தது; பின்னர் மறந்துவிட்டிருந்தேன்.

***

இப்பொழுது எனக்கு வேலை இல்லை. என்னுடைய வயசுக்கு இனி கவர்மெண்ட் உத்யோகம் கிடைக்காது. மனைவியும் உயிருடன் இல்லை. மகன் அமெரிக்காவில் குடும்பத்தோடு. வீட்டில் வெட்டியாக இருக்கப் பிடிக்காமல், தி.நகரில் இருந்த இந்த டுடோரியல் கல்லூரியில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்.

"சார், நீங்களா? வணக்கம் சார். என்னை ஞாபகம் இருக்குதா? ஸ்ரீதர் சார். _______ ஊரு சார். நீங்க கூட இன்ஸ்பெக்சனுக்கு வந்திருந்தீங்களே! "

ரிசப்சனில் இருந்தவரைப் பார்த்து, "கீதா மேடத்தை கூட்டிகிட்டு வாங்க" ..

"நான் சொன்ன மாதிரியே செஞ்சுட்டேன் சார். எங்க ஊரை எதிர்த்து, கீதாவை கல்யாணம் பண்ணிகிட்டு, சென்னைக்க் வந்து டுடோரியல் காலேஞ் வச்சு ஒரு மாதிரி சாதிச்சுட்டேன். சின்னதா ஒரு லிப்ட் கிடைச்சா போதும்னு, அடிக்கடி
சொல்வேன்ல சார். எனக்கு லிப்டே 'கீதா' தான் சார். என்ன ஒண்ணு, நான் நினைச்ச மாதிரி எங்க ஊரைத் தான் திருத்த முடியல. ஆனாலும் நான் நினைச்ச மாதிரி எல்லாரையும் படிக்க வைக்கிற தொழிலை ஆத்மார்த்தமா செஞ்சுகிட்டிருக்கிறேன்."

ஹாங்கரில் மாட்டிய சட்டை போல தொங்கிக்கொண்டிருக்கும் அவனது சட்டையில் வலது கரத்தின் பக்கம், காற்றில் ஊசலாடிய வண்ணம் ஏதோ ஒரு செய்தியை சொல்லிக்கொண்டிருந்தது.

(முற்றும்)

************
தூண்டுதல்கள்:
1) பண்புடனும், மரியாதையுடனும் இருப்பவன் உலகில் எதையும் சாதித்துவிடுவான். - இன்று படிக்க நேர்ந்த வாக்கியம்.
2) ஆசிரியர் தினம்.
3) தேன்கூடு போட்டி.

9/04/2006

கொஞ்சம் தூக்கி விடலாம்!

"நம்ம சாதிக்காரப் பையந்தான். அதான் கொஞ்சம் தூக்கிவிடலாம்னு பார்க்கிறேன். என்ன சொல்றீங்க"
"எல்லாஞ்சரிதான் ஆனா ஒழுங்கா இருப்பானா?"
"அதெல்லாம் நல்ல பையங்க. இவன்.. இவங்கூட இருக்கிற பிரண்ட்ஸ் எல்லாம் சேந்து ஊரில நிறைய செஞ்சுருக்கானுவ. வருசா வருசம் நம்ம மாரியம்மன் கோவில் திருவிழாவில முன்னாடி நின்னு எல்லா காரியமும் இவனுகத் தான் பாப்பானுவ.."
"ம்.. சரி வரச்சொல்லுங்க. பயோடேட்டா முக்கியம். நான் முதல்ல பேசிப்பார்க்கிறேன்"
"ரொம்ப நன்றிங்க, நாளைக்கே வரச்சொல்றேன்."

- இது ஒரு சிறு உரையாடல். ஆனால் இந்த எண்ணம் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. ஜாதி என்பது ஒரு உதாரணம் தான். இந்த தூக்கிவிடலுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கக்கூடும். அது சொந்த ஊர் என்பதாகவும் இருக்கலாம். தமிழ்நாடு என்பதாகவும் இருக்கலாம். இந்தியா என்பதாகவும் இருக்கலாம். உங்கள் கூட கிரிக்கெட் விளையாடியவர் என்பதாகக்கூட இருக்க முடியும்! என்னவாக இருந்தாலும், தனக்குத் தெரிந்தவரை தூக்கிவிட வேண்டும் என்ற நினைப்பில்லாத மனிதர்கள் மிகக் குறைவு.

சத்தியமாகத் தவறில்லை. இது மனித இயல்பு என்றே சொல்வேன். நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் இது போன்ற செயல்கள் மூலம் தூக்கிவிடத்தான் வேண்டும். ஆனால், இதையும் தாண்டிய ஒரு நிலை வேண்டும். அந்த நிலைக்கு கொஞ்சமே கொஞ்சம் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். அதைச் செய்ய முடியுமா?

--

அடுத்தவருக்கு உதவ ஒரு மனம் வேண்டும். கர்ணன் ஒரு கைக்கு தெரியாமல் மறு கை வழி தானம் செய்பவன் என்று சொல்வார்கள். ஏன் தெரியாமல் செய்ய வேண்டும்? தெரிந்து செய்வதில் தவறென்ன? மனிதனின் மிகப் பெரிய திமிர், கர்வம்- தான். இந்த கர்வம் வராமல் இருப்பதற்காகத்தான் இப்படி ஒரு செயல். ஒரு கையால் செய்யும் உதவி அடுத்த கைக்கு தெரிவது கூட தவறு என்பதைத்தான் இது சொல்கிறது.

உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது.. எப்படி முடியும்? முடிவது சுலபம்தானா? இதெல்லாம் ஒவ்வொருவருக்கும் உள்ள கேள்விகள்.

-


நீங்கள் ஏராளமான நண்பர்கள் உடையவரா? ஏன் ஏதேனும் செய்யக்கூடாது? ரொம்ப ஒண்ணும் இல்லை.

உங்கள் நண்பர்களுடன் பேசுங்கள். எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பாருங்கள். உங்களைச் சுற்றியுள்ள சிறு சிறு இடங்களில் சின்ன அளவில் ஏதேனும் உதவி செய்ய இயலுமா என்று யோசியுங்கள்.

உதா: உங்களூர் பள்ளிக்கு ட்யூப் லைட் போடத்தேவையிருக்கலாம். (ட்யூப் லைட் வெளிச்சம் தெரியாத அளவுக்கு பெயிண்ட் அடிக்கிற வேலையெல்லாம் வேணாமே ப்ளீஸ்!)

உங்களூரில் அல்லது அருகிலுள்ள முதியோர் இல்லத்திற்கோ அல்லது அனாதை ஆசிரமத்திற்கோ உதவி செய்ய முயற்சிக்கலாம்.

ஒரு பொது காரியத்திற்கு - அது கொசு உற்பத்தி மையமான சாக்கடையை சுத்திகரிப்பதாகக் கூட இருக்கலாம் - நீங்கள் இறங்கிச் செய்ய வேண்டியதில்லை, செய்யக்கூடியவர்களை கண்டுபிடித்து பணம் கொடுத்து செய்யச் சொல்லலாமே!

உங்களுக்கு அவசியமென்றிருந்தால், இதெல்லாம் ஒரு போட்டோ எடுத்து, உங்கள் ஊர் நிருபரிடம் சொல்லி ஒரு வரி நாளிதழில் எழுதச் சொல்லுங்கள். இதிலும் சிறு உபயோகம் இருக்கிறது. ஆர்வமுள்ள பலர் உங்களைத் தொடர்பு கொள்ள இது உதவலாம்.

--

நம்மில் பலருக்கு ஏதேனும் பெரிய விதத்தில் பிரச்சனை ஏற்படும் போதுதான் உதவிக்குழுக்கள் பற்றி தெரியவரும். குஜராத், ஒரிசா, சுனாமி, காஷ்மீர் என்று இயற்கையோ அல்லது சீற்றத்தின் விளாசலோ தாக்கும் போது மட்டும்தான் தேசத்தின் வேதனை தெரியும்.

குறைந்த பட்சம், இந்த நேரத்திலாவது உதவி செய்வதற்கு தயங்கவே தயங்காதீர்கள்.

--

போன போட்டியில் ஒரு பதிவரால் எழுதப்பட்ட ஆக்கம் : தாயுமான தந்தையுமான திரு. உதவும் கரங்கள் 'திவாகர்' பற்றி தெரிந்து கொள்ள : http://www.udavumkarangal.org

சிவானந்த குருகுலம் - நல்ல பல காரியங்களை சிறப்பான முறையில் செய்துவரும் ஒரிடம் - இதனைப் பற்றி தெரிந்து கொள்ள :http://www.buildhope.org/

--
இணைய உபயோகம் என்று வந்துவிட்ட பிறகு கிரடிட் கார்ட் இல்லாமல் முடியுமா?

கீழ்கண்ட இரண்டு தளங்களும் கிரடிட் கார்ட் முறையில் பணம் பெற்றுக்கொள்கிறார்கள்.

https://www.cry.org/donor/crydonation.asp
http://www.giveindia.org

அன்பளிப்புப் பொருட்களுக்கு...

www.craftsbridge.com,
http://www.akanksha.org/

சில தளங்கள்:

http://www.ravixp.net/IVA/
AimsIndia.net

இணையத்தில் சிறு சோதனை செய்து உருவாக்கிய பகுதிதான் இது. நன்றிகள் அனைத்து கட்டுரைகளுக்கும்:

http://www.desikan.com/blogcms/?item=139
http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_16.html

---

இதெல்லாம் விடச் சுலபமான ஒரு வழி இருக்கிறது. உங்களைச் சுற்றி பலரும் ஏதேனும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கவனித்து வாருங்கள். உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒருவர் சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். தயங்காமல் அவரிடம் பேசி, உங்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது என்பதனைத் தெரியப்படுத்துங்கள். அவசரமே இல்லை. கொஞ்சமே கொஞ்சம் ஒரு ஓரத்தில் இதெல்லாம் செய்யலாம் என்று தோன்றினாலே போதும்! உங்களுக்குள் எத்தனையோ சிந்தனைகள் ஊற்றெடுக்கும்!! அது யாரேனும் ஒருவருக்கேனும் வாழ்வில் ஏற்றம் பெற உதவி செய்வதாக அமையும்!

-
உபயம் : தேன்கூடு போட்டி.