8/22/2006

மாசும் மகிழ்ச்சியும்

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று சொல்வார்கள். குற்றம் பார்த்தால் சுற்றம் மட்டும் இல்லை நம்மையே நாம் அழித்துக்கொள்வது போலத்தான் ஆகும். இதில் குற்றம் என்று மொட்டையாகச் சொல்லாமல், பிறரிடம் குற்றம் காண்பிப்பதை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

சில உதாரணங்களுடன் இதைப் பார்க்கலாம். ஏனென்றால்.. இந்த கருத்து சொல்லும் வார்த்தைகள் படித்த உடனேயே புரிந்துவிடுவதாகத் தோன்றுவதுதான்! இப்படி படித்த உடனே புரிந்துவிடுவதாகத் தோன்றும் கருத்துகள் மனதில் பட்டு சிதறி விடுகின்றனவே தவிர, பதிந்து விடுவதில்லை. பதிந்துவிட்ட கருத்துக்கள் பல நேரங்களில் குப்பைகள்!

மெகாசீரியல்கள் - சன் டி.வி யை தொடர்ந்து ஒரு மணி நேரம் பார்த்தால் போதும் - என்றால் எவ்வளவு அடிக்ஷன் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மெகா சீரியல்களில் பார்த்தீர்களானால், மாமியார் எப்படி பாவமாக இருக்கும் (அல்லது நடிக்கும்) அந்த பிஞ்சு பாப்பா மருமகளை கரித்துக் கொட்டுகிறார்கள் என்று சற்றே கவனித்துப் பாருங்கள். செருப்பை எடுத்து அடிக்கலாமா என்று பார்க்கிறவர்கள் டென்ஷனை ஏற்ற வேண்டும் என்பதற்காகவே வசனங்கள் எழுதுவார்கள்.

இது போல கணவன்களும்/மனைவிகளும் கூட இருப்பதுண்டு. ஒருவரை பிடிக்க வில்லை என்றால், ஒதுங்கிப் போக வேண்டும், அல்லது ஒதுக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், கண்ணெதிரிலேயே வைத்துக்கொண்டு கழுத்தறுப்பு செய்வது என்பது சர்வ நிச்சயம் தவறு. தெரிந்தே தவறு செய்யும் இவர்கள் தன்னையே மாசுபடுத்திக்கொள்ளூம் துர்பாக்கியசாலிகள். இதில் யாரும் விலக்கல்ல..

மனசு என்பது ஒரு எடுப்பார் கைப்பிள்ளை. இதுதான் 100ற்கு 90 சதவீத மனிதர்களின் நிலை. வயதும் இந்த முதிர்ச்சியைத் தந்துவிடுவதில்லை. அடுத்தவர் சொல்வதைக் கேட்டு தன்னை மாற்றிக்கொள்வதென்பது மட்டுமல்ல.. உள்ள உணர்ச்சிகளுக்கு முழு ஒப்படைப்பினைத் தந்துவிட்டு வருத்தப்படுவதிலும் நாம் சளைத்தவர்கள் இல்லை. ஏன்? இதற்கு முக்கிய காரணம் சோம்பேறித்தனம். மனதை தெளிவாக வைத்துக்கொள்வதில் இருக்கும் சுகத்தினை மறந்துவிடும் சோகம்.

உள்ளத்தினில் எப்பொழுதும் உற்சாகமும், மகிழ்ச்சியும், தைரியமும் பொங்குமானால் இதைவிடச் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து இல்லை! இது உடலுக்கான நோய்க்கு மட்டுமல்ல உள்ளத்திற்கான நோய்க்கும் கூட!!

பிறரிடம் குற்றம் காண்பவன் தனது மனதையே மாசுப்படுத்திக்கொள்பவன் ஆவான்..!

8/19/2006

பணச்சுழற்சி

உலகத்தில் மனிதனின் மனதில் ஆழமாக உறுத்தக்கூடிய ஒன்று என்று ஒன்று இருந்தால்.. தன்னைத்தானே அவமானத்தில் அழுந்திக்கொள்ளும் மன வியாதி என்று ஒன்று இருந்தால் அது - வெற்று பர்ஸ் மட்டும்தான்.

பணம் இல்லாத அந்த நேரத்தில்தான் இருந்த பணத்தினை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்பதும், இப்பொழுது பணம் கிடைத்தால் என்னென்ன செய்யலாம் என்ற எண்ண ஓட்டங்களும் மனிதனை அலைக்கழிக்கின்றன.

பணம் பத்தும் செய்யும் என்று சொல்வதுண்டு. அது என்ன பத்து? எண்ணிக்கையா சொல்கிறார்கள்? ஒன்றுக்கு பத்தாக எதையும் செய்யத் தூண்டுவது பணம் மட்டும்தான் என்பதென்னவோ சரிதான்!

இல்லானை இல்லாளும் வேண்டாள் - இது குறள். கையில் காசில்லாமல் எந்த ஒரு கணவனாவது மனைவியை சந்தோசப்படுத்த முடியும் என்றாலோ அல்லது மனைவி சந்தோசப்படுகிறாள் என்றாலோ அந்த சந்தோசத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தான் செய்கிறது மனது. பணம் செய்யும் பாடுகள் தான் என்னே!

பணமில்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால் கடன் மட்டும் இருந்துவிட்டால்....! அவ்வளவுதான்!!

இந்த வேதனையை அனுபவிக்காத மனிதர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதைப் பேசுவதற்குக் கூட பலர் தயங்குவதுண்டு. கடன் மேல் கடன் வாங்கியாவது தன் வாழ்க்கை உயர் நிலையில் உவப்பாக இருப்பதாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்பவர்களும் உண்டு. இவர்கள் அனைவரையும் வாழ்க்கை என்றேனும் தட்டிப் பார்க்காமல் விடுவதில்லை. ஏமாற்றத்தின் உச்ச கட்டத்தினை அனுபவிக்க வைக்காமல் தவிர்ப்பதில்லை.

கையில் பணம் இருக்கும் போது தெரியாத, சேமிப்பின் உண்மையான மதிப்பும் உதவியும் நமக்குத் தெரிய வரும் போது காலம் தாண்டியிருக்கும். மீண்டும் பணம் வரும்போது, பெத்தடின் ஊசி போல இந்த சேமிக்கும் எண்ணமும் அவமானத்தினையும் மனசு அடிமனசில் போட்டு புதைத்துவிடுகிறது. பணத்தினை வைத்துக் கிறங்க ஆசைப்படுகிறது.

இன்று படித்தது:

பணத்தின் உண்மையான மதிப்பு, பிறரிடம் கடன் கேட்கும்போதுதான் தெரியும்.

8/18/2006

சுபாஷ் ஒரு நினைவு

சுதந்திரப் போராளிகளுகளில் சிறந்த போராளி - இது மகாத்மா காந்தி நேதாஜி பற்றி கூறியது. தன்னை இந்திய தேசிய பார்ட்டியில் இணைத்துக்கொள்வதற்கு போது, சுபாஷ் சந்திர போஸ் திறமையான துடிப்பான இளைஞன். காந்தியின் அஹிம்சா வாதத்தில் மிகவும் வெறுத்துப் போன இவர், ஆசாத் ஹிந்து பாவ் ல் இணைந்து பிரிட்டிஷ் ஆர்மியை இரண்டாம் உலக்ப்போரில் தோற்கடிக்க முடிவு எடுத்தார். இந்த முயற்சி வெற்றி பெறாவிட்டாலும், சுதந்திரப் போராட்டத்தின் தவர்க்க முடியாத ஒரு இடத்தினைப் பெற்றார் சுபாஷ் சந்திர போஸ்.
'ஜெய் ஹிந்த்' - இதுதான் இவரது முழக்கம். இந்திய தேசத்தின் சுதந்திர உணர்ச்சியை மிகப் பெரிய அளவிற்கு தூண்டிவிட்டவர் இவர். பெங்காலி குடும்பத்தில் ஜனவரி 23, 1897ம் ஆண்டு கட்டாக், ஒரிச்சாவில் பிறந்த சுபாஷ் பதினாறு ஆண்டுகள் பிறந்த ஊரிலேயே வாழ்ந்தார்.
இவரது தந்தை ஜான்கிநாஹ்ட் போஸ் லாயராகப் பணி புரிந்தவர். பழமைவாதி. பப்ளிக் பிராசிக்யூட்டராகவும், பின்னர் பெங்கால் லெஜிஸ்லேடிவ் கவுண்சிலிலும் பங்கேற்றவர்.
எட்டு சகோதரர்கள், ஆறு சகோதரிகள் - சுபாஷின் குடும்பம் பெரியதுதான் ஆனாலும், கட்டுப்பாடாக வாழ்ந்து வந்தனர். சுபாஷ் படிப்பதிலும், கடவுள் தேடலிலும், தனிமனித ஒழுக்கத்திலும் ஈடுபாடுடையவர். சமூக சேவைகள் செய்து வந்தார். விவேகானந்தரின் எழுத்துகளைப் படித்த பிறகு, ஆதாயமில்லாத சேவையே இவரது லட்சியமாயிற்று!

சுபாஷ் சந்திரபோஸ், கல்லூரியிலிருந்து துரத்தப்பட்டதே இவரது வாழ்க்கையின் டர்னிங் பாயிண்ட். தனது மகனின் திறமையை அறிந்த சுபாஷின் தந்தை, சுபாஸை இந்திய சிவில் சர்வீஸி இணைத்து பெரிய ஆளாக்க ஆசைப்பட்டார். சுபாஷ இங்கிலாந்திற்கு மேற்படிப்பிற்கு அனுப்பப்பட்டார். 1929 ம் ஆணடு நடைபெற்ற சிவில் சர்வீஸ் ஒபன் எக்ஸாமில் சுபாஷ நான்காவது இடத்தில் வந்தார். படிப்பில் மிகச் சுட்டியாக இருந்தாலும், சுபாஷ் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தார். காங்கிரஸ் பார்ட்டியில் இணைந்து இளைஞர் காங்கிரஸில் ஆர்வமுடன் ஈடுபாட்டார். இந்திய சிவில் சர்வீஸிலி இருந்து 1921ம் ஆண்டு ராஜினாமா செய்தார்.

இந்தியா திரும்பியவுடன் காந்தியை சந்திக்கச் சென்றார். இவரது ஐடியாக்கள், காந்தியின் அகிம்சா தத்துவத்துடன் ஒத்துவர வில்லை.கல்கத்தா திரும்பி, சி.ஆ.தாஸ் என்ற பெங்காலி சுந்திரப்போராட்ட வீரருடன் இணைத்தார். 1921ம் ஆண்டு பிரிண்ஸ் வேல்ஸின் இந்தியப் பிரயாணம் குறித்த ஆர்ப்பாட்டங்களை எதிர்ப்பதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார்.
இதனால் சிறை சென்றார். 1924 ம் ஆண்டு புதிதாக உறுவாக்கப்பட்ட கல்கத்தா கார்பரேசனின் சி.இ.ஓ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதே வருடன், தீவிரவாதி என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். முதலில் அலிபூர் ஜெயிலிலும், பின்னர் மண்டாலே (பர்மா) ஜெயிலிலும் அவர் சிறை வைக்கப்பார். 1925ல் இவரது தலைவர் சி.ஆர்.தாஸ் மரணம் சுபாஷை மிகவும் பாதித்தது.

1926-ல் பெங்கால் அசம்பிளியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 1027ல் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ஜெயிலிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பர்மா சிறை இவரது மனவுறுதியை அதிகப்படுத்தியிருந்தது.
1927-ல் போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு இருவரும் காங்கிரஸின் ஜெனரல் செக்ரட்டரியாக நியமிக்கப்பட்டனர். 1930ல் சுபாஷ் மீண்டும் அரஸ்ட் செய்யப்பட்டார். எட்டு மாத சிறை வாசத்திற்குப் பிறகு, கல்கத்தாவின் மேயரானார்.
1932ல் வியண்ணாவில் மருத்துவ காரணங்களுக்காக சென்றிருந்த போது, விதந்தாஸ் பட்டேலில் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.

பிர்ட்டனுக்கு எதிராக அனைத்து சக்திகளை ஒன்று திரட்ட வேண்டிய அவசியத்தினை அவர்கள் உணர்ந்தனர். ஒத்துழையாமை தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் ஒத்துழையாமை ஒரு போராட்டமாக அனைத்து பக்கங்களிலிருந்தும் வெடிக்க வேண்டும்". 1033ல் சுபாஷிடம் ஏராளமான பணம் மற்றும் சுந்திரப் போராட்டத்தின் எண்ணங்களையும் கொடுத்துவிட்டு, வித்தான் பட்டேல் மரணமடைந்தார்.

====
நேற்று சுபாஷ் சந்திரபோஸின் நினைவுநாள் என்று எங்கோ படித்தேன். இணையத்திலிருந்த ஒரு கட்டுரையினை சற்றே தமிழ்ப்படுத்தி பலகையில் கிறுக்கி வைக்கத்தோன்றியது. அதுதான் மேலே இருப்பது.

நன்றி: http://www.geocities.com/Athens/Atlantis/6304/nscb.html

8/16/2006

தவறுகள் - அவமானங்கள்

தவறுகள் மனித இயல்பு.. உண்மைதான். ஆனாலும் இந்த தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில்தான் எத்துணை மாறுதல்கள். சிலருக்கு தவறென்று படுவது, பல நேரங்களில் எதிராளிக்கு தவறாகத் தோன்றுவதில்லை. இந்த நிலையில், தான் விரும்பிய பெண்ணுக்கு மட்டும்தான் அத்தனையும் அழகு என்பது போல தனக்கு தவறென்று தோன்றுகிற ஒரே காரணத்திற்காக.. வாழ்க்கை முழுவதும் வருத்தப்படும் வித்ததில் அடுத்தவரை அவமானப்படுத்துபவர்கள் அதிகம்.

சிறு சிறு மின்னல்களாக உலகில் ஆங்காங்கே கிடைக்கும் பல சுகங்களையும் இப்படிப்பட்டவர்களால் எதிர்கொள்ள முடியாமல் போய்விடும். இதை விட கொடுமை இத்தகையவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் செய்த தவறை சொல்வதே இல்லை.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் குழந்தைகளும் பெற்றோர்களும் தான். அப்பா அல்லது அம்மா அடிப்பார் என்று தெரிந்த பின்னரும் தான் செய்கின்ற தப்பைச் எத்தனைப் பிள்ளைகளால் தயங்காமல் சொல்ல முடியும்? முடிந்த வரை மறைக்கவே விரும்பும். இந்த சிறுவயது பழக்கம் காலத்திற்கும் தொடராமல் விடாது!

செய்த தவறை சொல்லத் தயங்குவது என்பதே தனி சப்ஜெக்ட். எதற்காகச் சொல்ல வேண்டும்? எவ்வள்வு தூரம் இதில் உதவி இருக்கிறது? இப்படியெல்லாம் பல வித கணிப்பிற்குப் பிறகே.. இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. செய்வது தவறாகவே இருந்தாலும், அல்லது செய்தது தவறாகவே இருந்தாலும், அதனைத் தவறு என்று ஒப்புக்கொள்வதே உலக மகாத் தவறு என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க..

இன்று படித்தது:

தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் வேறில்லை!