8/22/2006

மாசும் மகிழ்ச்சியும்

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று சொல்வார்கள். குற்றம் பார்த்தால் சுற்றம் மட்டும் இல்லை நம்மையே நாம் அழித்துக்கொள்வது போலத்தான் ஆகும். இதில் குற்றம் என்று மொட்டையாகச் சொல்லாமல், பிறரிடம் குற்றம் காண்பிப்பதை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

சில உதாரணங்களுடன் இதைப் பார்க்கலாம். ஏனென்றால்.. இந்த கருத்து சொல்லும் வார்த்தைகள் படித்த உடனேயே புரிந்துவிடுவதாகத் தோன்றுவதுதான்! இப்படி படித்த உடனே புரிந்துவிடுவதாகத் தோன்றும் கருத்துகள் மனதில் பட்டு சிதறி விடுகின்றனவே தவிர, பதிந்து விடுவதில்லை. பதிந்துவிட்ட கருத்துக்கள் பல நேரங்களில் குப்பைகள்!

மெகாசீரியல்கள் - சன் டி.வி யை தொடர்ந்து ஒரு மணி நேரம் பார்த்தால் போதும் - என்றால் எவ்வளவு அடிக்ஷன் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மெகா சீரியல்களில் பார்த்தீர்களானால், மாமியார் எப்படி பாவமாக இருக்கும் (அல்லது நடிக்கும்) அந்த பிஞ்சு பாப்பா மருமகளை கரித்துக் கொட்டுகிறார்கள் என்று சற்றே கவனித்துப் பாருங்கள். செருப்பை எடுத்து அடிக்கலாமா என்று பார்க்கிறவர்கள் டென்ஷனை ஏற்ற வேண்டும் என்பதற்காகவே வசனங்கள் எழுதுவார்கள்.

இது போல கணவன்களும்/மனைவிகளும் கூட இருப்பதுண்டு. ஒருவரை பிடிக்க வில்லை என்றால், ஒதுங்கிப் போக வேண்டும், அல்லது ஒதுக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், கண்ணெதிரிலேயே வைத்துக்கொண்டு கழுத்தறுப்பு செய்வது என்பது சர்வ நிச்சயம் தவறு. தெரிந்தே தவறு செய்யும் இவர்கள் தன்னையே மாசுபடுத்திக்கொள்ளூம் துர்பாக்கியசாலிகள். இதில் யாரும் விலக்கல்ல..

மனசு என்பது ஒரு எடுப்பார் கைப்பிள்ளை. இதுதான் 100ற்கு 90 சதவீத மனிதர்களின் நிலை. வயதும் இந்த முதிர்ச்சியைத் தந்துவிடுவதில்லை. அடுத்தவர் சொல்வதைக் கேட்டு தன்னை மாற்றிக்கொள்வதென்பது மட்டுமல்ல.. உள்ள உணர்ச்சிகளுக்கு முழு ஒப்படைப்பினைத் தந்துவிட்டு வருத்தப்படுவதிலும் நாம் சளைத்தவர்கள் இல்லை. ஏன்? இதற்கு முக்கிய காரணம் சோம்பேறித்தனம். மனதை தெளிவாக வைத்துக்கொள்வதில் இருக்கும் சுகத்தினை மறந்துவிடும் சோகம்.

உள்ளத்தினில் எப்பொழுதும் உற்சாகமும், மகிழ்ச்சியும், தைரியமும் பொங்குமானால் இதைவிடச் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து இல்லை! இது உடலுக்கான நோய்க்கு மட்டுமல்ல உள்ளத்திற்கான நோய்க்கும் கூட!!

பிறரிடம் குற்றம் காண்பவன் தனது மனதையே மாசுப்படுத்திக்கொள்பவன் ஆவான்..!

1 comment:

Vel said...

karuthukkal nanadraaha irunthathu..
Nandri.