8/19/2006

பணச்சுழற்சி

உலகத்தில் மனிதனின் மனதில் ஆழமாக உறுத்தக்கூடிய ஒன்று என்று ஒன்று இருந்தால்.. தன்னைத்தானே அவமானத்தில் அழுந்திக்கொள்ளும் மன வியாதி என்று ஒன்று இருந்தால் அது - வெற்று பர்ஸ் மட்டும்தான்.

பணம் இல்லாத அந்த நேரத்தில்தான் இருந்த பணத்தினை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்பதும், இப்பொழுது பணம் கிடைத்தால் என்னென்ன செய்யலாம் என்ற எண்ண ஓட்டங்களும் மனிதனை அலைக்கழிக்கின்றன.

பணம் பத்தும் செய்யும் என்று சொல்வதுண்டு. அது என்ன பத்து? எண்ணிக்கையா சொல்கிறார்கள்? ஒன்றுக்கு பத்தாக எதையும் செய்யத் தூண்டுவது பணம் மட்டும்தான் என்பதென்னவோ சரிதான்!

இல்லானை இல்லாளும் வேண்டாள் - இது குறள். கையில் காசில்லாமல் எந்த ஒரு கணவனாவது மனைவியை சந்தோசப்படுத்த முடியும் என்றாலோ அல்லது மனைவி சந்தோசப்படுகிறாள் என்றாலோ அந்த சந்தோசத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தான் செய்கிறது மனது. பணம் செய்யும் பாடுகள் தான் என்னே!

பணமில்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால் கடன் மட்டும் இருந்துவிட்டால்....! அவ்வளவுதான்!!

இந்த வேதனையை அனுபவிக்காத மனிதர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதைப் பேசுவதற்குக் கூட பலர் தயங்குவதுண்டு. கடன் மேல் கடன் வாங்கியாவது தன் வாழ்க்கை உயர் நிலையில் உவப்பாக இருப்பதாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்பவர்களும் உண்டு. இவர்கள் அனைவரையும் வாழ்க்கை என்றேனும் தட்டிப் பார்க்காமல் விடுவதில்லை. ஏமாற்றத்தின் உச்ச கட்டத்தினை அனுபவிக்க வைக்காமல் தவிர்ப்பதில்லை.

கையில் பணம் இருக்கும் போது தெரியாத, சேமிப்பின் உண்மையான மதிப்பும் உதவியும் நமக்குத் தெரிய வரும் போது காலம் தாண்டியிருக்கும். மீண்டும் பணம் வரும்போது, பெத்தடின் ஊசி போல இந்த சேமிக்கும் எண்ணமும் அவமானத்தினையும் மனசு அடிமனசில் போட்டு புதைத்துவிடுகிறது. பணத்தினை வைத்துக் கிறங்க ஆசைப்படுகிறது.

இன்று படித்தது:

பணத்தின் உண்மையான மதிப்பு, பிறரிடம் கடன் கேட்கும்போதுதான் தெரியும்.

2 comments:

Anonymous said...

True. காசின் மதிப்பை அறியா மனிதன் உலகில் செல்லாக்காசு.

Anonymous said...

நன்றி சரவ்.