சின்னதாக ஒரு லிப்ட்
"எனக்கு மட்டும் ஒரு சின்ன லிப்ட் கிடைச்சா எங்கியோ போயிடுவேன் சார்...!"
- அந்த தெருமுனை மொட்டைப் பாலத்தில் அவனுடன் பேசியபோது இரவு நேரத்தின் கருமையையும் தாண்டி அந்த கண்களில் ஒரு பளபளப்பு தெரிந்தது. இந்த தேசத்தின் எத்தனையோ இளைஞர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாகத்தான் அவன் எனக்குத் தோன்றினான்.
அது ஒரு சராசரியான கிராமம். சென்னையைப் போன்ற எந்த ஒரு பரபரப்பிற்கும் பழக்கமில்லாத ஊர். தெருவில் சகஜமாக அவ்வப்போது மாட்டு வண்டிகளும், எப்பொழுதாவது தூரத்தில் பேருந்தோ அல்லது லாரியோ செல்லும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த ஊர் பள்ளியின் மேற்பார்வைக்காக நான் அங்கு வந்திருந்தேன். பள்ளியின் ஹெட்மாஸ்டர் வீட்டு மாடியிலேயே ஒரு சிறு அறை ஒதுக்கித் தந்திருந்தார்கள்.
**
"இந்த காலத்து பசங்க எல்லாம் இப்படித்தான் சார். வெட்டு குத்துன்னு, இப்ப பாருங்க, இனிமேல என்ன செய்ய முடியும். தேவையா இது?" - வாட்ச்மேன் வாயில் வெற்றிலைக் குதப்பலுடன் பேசிக்கொண்டிருந்தபோது, பதில் சொல்ல
முடியாமல் வெறித்துத் தான் பார்க்க முடிந்தது எனக்கு.
**
ஸ்ரீதரன் என்ற அந்த 23 வயது இளைஞன் அந்த பள்ளியில் டெம்பரவரியாகத்தான் வேலைக்கு சேர்ந்திருந்தான். பி.காம் படித்துவிட்டு, எம்.காம் கரஸ்பாண்டென்ஸில் படித்து கொண்டிருந்தான். அப்பா அந்த ஊர் போஸ்ட் மேன். அவருக்குத் தெரியாதவர்கள் வெளியூரிலிருந்து வந்தவர்களாகத்தான் இருக்க முடியும்!
ஸ்ரீதரன் பேசுவதற்கு இனிமையானவன். ஏராளமான கனவுகளைச் சுமந்தவன்.நிறைய தன்னம்பிக்கை உடையவன். தனது தந்தையின் பாரத்தைக் குறைக்க கிடைத்த வேலைக்குச் செல்வதில் தவறில்லை என்று இந்த பள்ளியில் தற்காலிக வேலையில் இருந்தான். அவனது பேச்சும, சுத்தமும், பண்பும், மரியாதையான பழக்கமும் பார்த்தவுடன் அவனிடம் நிறைய பழக வேண்டுமென்று எனக்குத் தோன்றிவிட்டது. பள்ளியில் வேலை முடிந்து மாலை நேரத்தில் சைக்கிளில் என்னை டபுள்ஸ் வைத்து ஹெட்மாஸ்டர் வீட்டிற்கு அருகிலுள்ள மொட்டுப் பாலத்தில் இறங்கி சில மணி நேரம் பேசிக்கொண்டிருப்பது எங்களது வழக்கம். அதற்குள் இருட்ட ஆரம்பித்திருக்கும்.
'ஜெயிக்கணும் சார். இந்த உலகத்தையே ஜெய்க்கணும். நம்மால ஏதாச்சும் செய்ய முடியும். நம்மை சுத்தி இருக்கறவங்க எல்லாரையும் நல்ல நிலைக்கு நாம கொண்டு போற மாதிரி ஒரு நிலைக்கு நான் போகணும் சார். நான்னா நான் மட்டும் இல்லை. நீங்க நான் எல்லாருமே...
இந்த ஊரில பாருங்க சார். சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் அடிதடி. பிரச்சனை. ஒரு கடைக்கு மறு கடைக்கும் நடுவுல தகறாரு. அதனால வெட்டு குத்து கொலை. அதில பெருமை வேற. கள்ளன்னா சும்மாவா அப்படின்னு ஒரு
தெனாவெட்டு. இதெல்லாம் ஏன்? படிப்புதான் சார். படிப்பு கம்மியா இருக்கறதுதான் இவங்க எல்லாருமே இப்படி குறுகிய புத்தியில இருக்கக் காரணம். இந்த கிராமத்தையே மாத்தணும் சார்.
இதெல்லாம் சொல்றேன்னு என்னை ஒண்ணும் பெரிசா நினைக்காதீங்க சார். நானும் இதே குருப்தான். நானும் கள்ளந்தான் சார். இதே மாதிரி இப்படி கம்போட அலைஞ்சு எத்தினியோ பேரை நானும் அடிச்சுறுக்கேன். ஆனால், அதெல்லாம் தப்புண்ணு சொல்ல முடியாத அளவுக்கு மனசுக்குள்ள திமிரு கிடந்து ஆடுதுங்கறதும் புரியுது சார். எத்தினியோ நல்ல புத்தகங்கள படிக்கிறப்போ, எவ்வளவு தப்பு பண்றோம்கறது தெரியுறப்போ கொஞ்சம் வேதனையா இருக்கு..'
ஒரு பின் மாலை நேரத்தின் அமைதியில் ஸ்ரீதரன் பேசியதை என்னால் நீண்ட நாள் மறக்க முடியவில்லை.
***
"இப்ப எங்க இருக்காப்ல?"
"தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரியில சேர்ந்திருக்காங்கலாம். இன்னும் ஒரு வாரத்தில டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கண்ணு சொல்றாங்க!"
***
"என்ன ஸ்ரீதர், உன்னை பத்தி பசங்க ஏதோ சொல்றாங்க. யாரோ பொண்ணை டாவடிக்கிறியாம்?"
ஸ்ரீதர் முகத்தில் சட்டென்று வெட்கம் படிந்தது..
"யார் சார் சொன்னது உங்க கிட்ட?" குரலில் கொஞ்சம் அவசரமும்,இயலாமையும் இருந்தது.
"யாராயிருந்தா என்ன? விசயத்தை சொல்லு.. "
"ஆமா சார். அக்கிரகாரத்துலேர்ந்து வருது சார். நம்ம ஸ்கூலதான் டீச்சர் டிரைனிங் படிக்குது."
"அட.. என்ன ஐய்யர் ஊட்டு பொண்ணா? ஒத்து வருமா?"
"சாதியில என்ன சார் இருக்கு? எனக்கு ஒண்ணும் இல்ல. ஆனா எங்க ஐயன் ஒத்துப்பாரான்னுதான் கொஞ்சம் பயமா இருக்கு.."
அவன் முகத்தில் கவலையும், கலக்கமும் தெரிந்தது.
"அதெல்லாம் சரியாயிடும் ஸ்ரீதர். உலகத்தில எத்தினியோ பேர் இதெல்லாம் செய்யத்தான் செய்யராங்க."
"ஆமா சார். ஆனாலும் ரெண்டுபக்கமும் பிரச்சனை வரத்தான் சார் செய்யும். கீதாவுக்கு அப்பா இல்ல. இருந்தாலும், அவங்க வீட்லயும் ஆர்தடாக்ஸ் பேமிலிதான். நான் மட்டும் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு எப்படியாவது
வந்துட்டேன்னா, தைரியமா போயி பேசிடுவேன். ஸ்கூலியே பர்மனெண்டாயிட்டா கூட இப்போதைக்கு போதும்."
இந்த பிள்ளை, மனசுபோல சீக்கிரமே எல்லாம் நல்லபடியா நடக்கணும்.. இறைவா.. - என் மனசுல் இறைஞ்சுதல் தோன்றியது.
***
"ஏதோ பொம்பள பிரச்சனை போல இருக்கு சார். இவன் இறங்கி பேசறப்போ என்னமோ பேசிகிட்டானுங்க. இதெல்லாம் தேவையா சார் இவனுக்கு?"
"அடி பலம் போல.. பெரிய ப்ரச்சனையாயிடுச்சு. இவனுக்கு எதுக்குங்க தேவையில்லாத வேலை. எவனோ எவனையோ வெட்டப்போனா ஒதுங்கிட்டு போக வேண்டியதுதான். மத்தியஸ்தம் பண்றானாம். லூஸுப் பய. இப்ப யாருக்கு
ப்ரச்சனை? தேவையா இது?"
***
சென்னைக்கு வந்து நீண்ட நாட்களுக்கு ஸ்ரீதரனும் அவன் நினைவுகளும் மனதில் இருந்தது. சொந்த ஊரில் ஏற்பட்ட ஏதோ ஒரு தகறாரில் கை வெட்டுப்பட்டு தஞ்சாவூர் ஆஸுபத்திரியிலிருந்து அவன் திரும்ப வருவதற்கு முன்னதாகவே
என் வேலை முடிந்து சென்னை திரும்பி விட்டிருந்தேன். வலது கை இழந்த அவனுக்கு, வாழ்க்கையில் முன்னேற்றம் எந்த விதத்தில் வரக்கூடும்? அவன் நினைத்த வண்ணம், இனி பள்ளிக்கூட வேலையாவது பர்மனெண்ட் ஆகுமா?
இதெல்லாம் என் மனதில் சில காலம் அழைக்கழிந்தது; பின்னர் மறந்துவிட்டிருந்தேன்.
***
இப்பொழுது எனக்கு வேலை இல்லை. என்னுடைய வயசுக்கு இனி கவர்மெண்ட் உத்யோகம் கிடைக்காது. மனைவியும் உயிருடன் இல்லை. மகன் அமெரிக்காவில் குடும்பத்தோடு. வீட்டில் வெட்டியாக இருக்கப் பிடிக்காமல், தி.நகரில் இருந்த இந்த டுடோரியல் கல்லூரியில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்.
"சார், நீங்களா? வணக்கம் சார். என்னை ஞாபகம் இருக்குதா? ஸ்ரீதர் சார். _______ ஊரு சார். நீங்க கூட இன்ஸ்பெக்சனுக்கு வந்திருந்தீங்களே! "
ரிசப்சனில் இருந்தவரைப் பார்த்து, "கீதா மேடத்தை கூட்டிகிட்டு வாங்க" ..
"நான் சொன்ன மாதிரியே செஞ்சுட்டேன் சார். எங்க ஊரை எதிர்த்து, கீதாவை கல்யாணம் பண்ணிகிட்டு, சென்னைக்க் வந்து டுடோரியல் காலேஞ் வச்சு ஒரு மாதிரி சாதிச்சுட்டேன். சின்னதா ஒரு லிப்ட் கிடைச்சா போதும்னு, அடிக்கடி
சொல்வேன்ல சார். எனக்கு லிப்டே 'கீதா' தான் சார். என்ன ஒண்ணு, நான் நினைச்ச மாதிரி எங்க ஊரைத் தான் திருத்த முடியல. ஆனாலும் நான் நினைச்ச மாதிரி எல்லாரையும் படிக்க வைக்கிற தொழிலை ஆத்மார்த்தமா செஞ்சுகிட்டிருக்கிறேன்."
ஹாங்கரில் மாட்டிய சட்டை போல தொங்கிக்கொண்டிருக்கும் அவனது சட்டையில் வலது கரத்தின் பக்கம், காற்றில் ஊசலாடிய வண்ணம் ஏதோ ஒரு செய்தியை சொல்லிக்கொண்டிருந்தது.
(முற்றும்)
************
தூண்டுதல்கள்:
1) பண்புடனும், மரியாதையுடனும் இருப்பவன் உலகில் எதையும் சாதித்துவிடுவான். - இன்று படிக்க நேர்ந்த வாக்கியம்.
2) ஆசிரியர் தினம்.
3) தேன்கூடு போட்டி.
9/05/2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அழகான சிறுகதை, வாழ்த்துக்கள் !
***
"படிப்பு கம்மியா இருக்கறதுதான் இவங்க எல்லாருமே இப்படி குறுகிய
புத்தியில இருக்கக் காரணம்.", "எல்லாரையும் நல்ல நிலைக்கு நாம கொண்டு போற மாதிரி ஒரு நிலைக்கு நான் போகணும் சார்"
- ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்த வரிகள்
***
பீட்டா பிளாகருக்கு இந்த கிறுக்கல் பலகையை மாற்றியிருக்கிறேன். மறுமொழியிடுபவரின் பெயரில் பிரச்சனை இருக்கிறது.
நல்ல கருத்துள்ள கதை. எனக்குப் பிடித்தது...
//பீட்டா பிளாகருக்கு இந்த கிறுக்கல் பலகையை மாற்றியிருக்கிறேன். மறுமொழியிடுபவரின் பெயரில் பிரச்சனை இருக்கிறது.
//
யதா, பீட்டா டெம்ளேட்டில் என்னால் சில ஸ்கிரிப்டுகள் சேர்க்க முடியவில்லை. தேனி எழுத்துரு ஸ்கிரிப்டு உட்பட. உங்களால் எப்படி முடிந்தது? எனக்கு உதவ முடியுமா?
முரட்டுக்காளை,
உங்கள் கணக்கில் பிட்டா பிளாகரில் நுழைந்தால், டெம்ப்ளேட் என்னும் பக்கத்தில், 'Switch to Classsic Template' என்று ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதற்கு மாறிவிட்டால் போதுமானது. உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அனைத்து ஸ்கிரிப்டையும் இணைக்கலாம். தேன்கூடு ஸ்கிரிப்ட்,டைனமிக் பாண்ட் எல்லாம் செய்ய முடியும்.
Post a Comment