இலக்கிய விமர்சனம் என்பது, திற்னாய்வாளர்களும், தகுதியில் சிறந்த ஆர்வலர்களும் ஈடுபடுவது. எப்பொழுதேனும், வேறு சிலரும் ஒரு பழக்கத்திற்காக விமர்சனம் செய்து பார்க்கத் துணிவதுண்டு (என்னைப்போல!). ஆனால், இத்தகைய திடீர் விமர்சகர்கள் ஒரு கட்டுரையையோ கதையையோ முழுமையாகத் திறனாய்வு செய்பவர்களல்ல, ஆனால் பெரும்பாலும், அவற்றின் அறிமுகத்தினைத் தருபவர்கள்.
ஒரு விமர்சனம் எழுதும் போது, கவனத்தில் கொள்ளவேண்டியவை எவையென்று கேட்டால் கிடைக்கும் பதில்...:
அந்த படைப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதன் குறிப்பு, நிறைகள்,குறைகள்.
ஒரு விமர்சனம் எழுதுவது எந்த விதத்தில் விமர்சகர்க்கு உதவும் என்ற கேள்வி எழலாம். அதற்கு பதில்...
1) தகவல் தேடல் : விமர்சனம் எழுதுவதற்காக நீங்கள் செய்யும் தேடல்கள். உபயோகப்படுத்தும் புத்தகங்கள். போன்றவை
2) நிறை குறைகளை தூக்கிப் பார்த்தல் : படைப்பின் நிறைகளையும் குறைகளையும் சீர்தூக்கிப் பார்க்கக்கூடிய உங்களது திறமை.
மேற்கண்ட இந்த இரண்டு ஏரியாக்களிலும், ஒருவரின் திறமை மேம்பட விமர்சனங்கள், திறனாய்வுகள் உதவி செய்கின்றன.
ஒரு விமர்சனம் கீழ்கண்டவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்:
அ) அமைப்புடன், விமர்சிப்படும் பொருளை தொடர்புடனும் நேரடியாகவும் அணுகும் விதத்தில் இருக்க வேண்டும்
ஆ) மொத்தமாக எழுதப்படும் விமர்சனமே ஒரு கட்டுரையாக அமைவது அவசியமில்லை. சரியான விதத்தில் குறைவான வார்த்தைகளுடன் இருந்தால் போதுமானது.
இ) எங்கெல்லாம் படைப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டும்
ஈ) படைப்பின் அடுத்த கட்டத்தின் முன்னேற்றத்திற்கான அல்லது தேடலுக்கான கேள்விகளைத் தர வேண்டும்.
சரிதான்.. இவ்வளவும் இருக்கு. ஆனால் இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா? இதெல்லாம் கவனிக்காம விமர்சனத்துக்கு வந்தாச்சே! **SAD**
சரி, சரி வந்ததுதான் வந்தே, பேசிட்டு போயிடுன்னு சொல்றீங்களா.. ம் இதோ....
---
மரணம் - மாபெரும் விடுதலை - சிறுகதை - வினையூக்கி
காதல் தோல்வியிலிருந்து விடுதலை? பெரும்பாலானவர்களின் காதலின் தோல்வியில் இந்த தற்கொலை வலி நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்? அவமானம் தரும் வேதனைதான். அவமானம் என்பது அவ்வளவு தவறா? அவமானம் தாங்க முடியாதா? தாங்கினால் என்ன தவறு? இதெல்லாம் அந்த நேரத்தில் ஏனோ தோன்றுவதே இல்லை. காதல் தோல்விக்கென்று அல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் தோல்வியின் போது ஒரு தற்கொலை வேதனை எழுத்தான் செய்கிறது.
உலக வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், கையில் வாளெடுத்த ஒவ்வொருவரும், தோல்வி நேரத்தில், தன் வாளால் தன்னையே அழித்துக்கொள்வதை கண்டு பிடிக்கலாம். பகத்சிங்கின் குரு ஆசாத் - ஆகட்டும், ஹிட்லர் ஆகட்டும் யாராக இருந்தாலும், அழிவு அல்லது தோல்வி நெருங்கும் போது அதைத் தாங்க முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.
காதல் தோல்வியினால் மனமுடைந்து, மனதிற்கு நெருங்கிய எழுத்தாளரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார் கதாநாயகன். சொல்லியபடி எழுத்தாளரும் வந்து போக மனநிம்மதியடைகிறார். ஆனால் இதில் வேடிக்கை, வந்த எழுத்தாளர் நேற்றிரவே இறந்துவிட்டவர் என்பதுதான்!
அருமையான கதை. நன்றாக எழுதியும் இருக்கிறார். கண்டிப்பாக படிக்கலாம்.
குறை: எழுத்துப்பிழைகள், உரையாடல்களில் இயல்பு தமிழும் உரைநடைத் தமிழும் கலந்துவருவது சற்று இடறுகிறது (உதா:லீவு போட்டுட்டு ). நிறுத்தற்குறிகள் சுத்தமாக இல்லை. இதில் அடுத்த முறை கதாசிரியர் கவனம் வைப்பார் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் வினையூக்கி.
***
வாங்கிய விடுதலை. - வசந்த்
விடுதலை - அதிலும் கஷ்டப்பட்டு வாங்கிய விடுதலை வீணாகப் போவதா?! வசந்த் சொல்லும் ஒவ்வொரு இல்லைகளும் தினசரி நாம் காணுபவைதான்.
எத்தனையோ இல்லாத போதும்,
வாங்கிய விடுதலை
வீண்
போகவில்லை...!
- அருமையான ஒரு கவிதையுடன் வந்திருக்கிறார் வசந்த். கொஞ்சமே கொஞ்சம் நீளம் அதிகம். ஆயினும் படிக்கலாம்.
வாழ்த்துக்கள் வசந்த்.
மாணிக்கம் - பா.முரளிதரன்
விடுதலை உணர்வில் இரண்டாம் உலகப்போரினை இந்தியாவுக்குச் சாதகமாக பயன்படுத்த ஐ.என்.ஏ செய்த முயற்சி, அதில் ஈடுபட்ட ஒரு பெரியவரின் சந்திப்பு. இதனை உணர்வு பூர்வமாக எழுதியிருக்கிறார் முரளி. இன்னமும் நல்ல ஸ்கோப் உள்ள கதை. குறிப்பிட்ட சாதி பற்றிய கமெண்ட் போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
வாழ்த்துக்கள் முரளிதரன்.
ஓர் இரவில்….தீபாவை மீட்க - கடல் கணேசன்
விகடன் மாணவ பத்திரிக்கை நிருபர் என்பது இளைய தலைமுறையின் கனவுகளில் ஒன்று என்றால் மிகையாகாது. மனசும் உடம்பும் துள்ளுகின்ற வயசு அது. சென்னையைத் தாண்டிய தமிழ்நாட்டின் பல மூலைகளிலும் எத்தனையோ இளைய தலைமுறைகளின் ஒரே பொழுது போக்கு பத்திரிக்கைகள்; அதில் நிருபர் என்பது ஒரு தைரியமான கனவு. சென்னை அப்படி அல்ல. இங்கு படிப்பே பிரதானம்.
ஒரு மாணவ நிருபராக இருந்த காலகட்டத்தில், தீபா என்ற பெண்ணை விபசாரக் கும்பலிலிருந்து எப்படி விடுவித்தார் என்பதனை சற்றும் சூடு குறையாமல் திறமையாகச் சொல்லியிருக்கிறார். நடுநடுவே அடைப்புக்குறிக்குள் சுவாரசியமான கமெண்ட்களும் கூட.
வாழ்த்துக்கள் கடல் கணேசன்.
ராஜகுமாரன் - நெல்லை சிவா
முதிர் கன்னிகளின் பிரச்சனை - மனப்புழுக்கத்திலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்தனை என்ற விதத்தில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். சரளமான எழுத்து. படிக்கும் போது, 5 பெண்கள் என்பதால், யார் என்ன என்ற குழப்பம் வருகிறது. மற்றபடி மிகவும் நல்ல கதை என்று தான் சொல்லவேண்டும். படித்து முடிக்கும் போது, கடைசி பெண்ணுக்குத் திருமணம் என்ற சந்தோசத்தைவிட, இத்தனை பெண்களுக்கும் திருமணம் நடக்க வில்லையே என்ற வேதனைதான் மனதில் நிற்கிறது. இது படைப்பின் வெற்றியா தோல்வியா?! தெரியவில்லை.
வாழ்த்துக்கள் நெல்லை சிவா
வண்ணத்திப்பூச்சி வயசென்ன ஆச்சு… - த.அகிலன்
தும்பிகளைப் பிடித்து விளையாடும் விளையாட்டு, வண்ணத்துப்பூச்சிகள் என்று செல்லும் கதை, தும்பியைப் போன்ற ஹெலிகாப்டரின் அறிமுகம் வரும் போது சட்டென்று வேறு பக்கம் எடுக்கிறது. "ஒர் நதியைப்போல ஒரு புன்னகையைப்போல , ஓர்பூவின் மலர்தலைப்போல , நான் இழந்துபோன ஊரின் விடுதலையும் கனவுகளும் மறுபடியும் வரக்காத்திருக்கிறேன்." - என்கிறார். இந்த படைப்பிற்கு அருமையான விமர்சனங்கள் பின்னூட்டத்திலேயே எழுதிவிட்டார்கள் என்பதால், அதனையே எடுத்தெழுதிவிடுகிறேன்.
நம் தாயக மணம் கமழ, சுதந்திரத்தை ஒப்புவமையோடு நீங்கள் தந்த விதமே தனியழகு - கானாபிரபா
உங்கள் ஏக்கமும் வலியும், ஒவ்வொரு எழுத்திலும் பிரதிபலிக்குது - குமாரி
வாழ்த்துக்கள் அகிலன்.
விதை. சரவ்.
விடுதலை அடையாத தேசத்தின் ஒரு இளைஞன் - எப்படி விடுதலை வேள்வியில் தன்னையும் அறியாமல் ஈடுபடுகிறான் - விதையாக உருவாகுகிறான் என்பதன் ஒரு கற்பனைப் படைப்பு. படிக்கும் கடைசி விநாடி வரை சஸ்பென்ஸ் உடையாமல் செய்திருக்கிறார். படிக்கும் போது மனக்கண் முன் காட்சிகள் விரிகிறது. முக்கியாக படித்து முடித்த பிறகு! கதையை இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாமோ?
வாழ்த்துக்கள் சரவ்.
விடுதலை - சேவியர்
விடுதலை விரும்பிகள் அடிமையாவதும், அடிமையாக இருப்பவர்கள் விடுதலை தேடுவதும், ஒரு சுழல் என்கிறார். கவிதைகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் இது குறித்த அதிகம் எழுத முடியவில்லை.:-(
இரகசியம். - வசந்த்
மீண்டும் ஒரு அருமையான கதையுடன் வந்திருக்கிறார் வசந்த். பல விதங்களில் புதிய கோணத்தில் எழுதுவது இவருக்கு கை வந்ததாக இருக்கிறது. விடுதலைப் போராளிகளின் ஒரு பக்கம், காதல் செண்டிமெண்ட், இராணுவச்சூழல் என்று கலவையாக இருக்கிறது இந்த கதை.
வாழ்த்துக்கள் வசந்த்.
கனம் - Badnewsindia
கனம் என்ற தலைப்பிற்கேற்ற கதை. எது விடுதலை ? வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் யாருக்கும் எந்த பிரச்சனையும் தராமல் செல்வதே விடுதலை என்று சொல்கிறார்?! கதை அமைப்பு, எழுதிய விதம் இவற்றில் ஆசிர்யர் வெற்றி பெற்றிருக்கிறார். இயல்பான நிகழ்ச்சியாக பேச்சுக்களாக உறுத்தாததாக இருப்பது ஒரு முக்கிய காரணம். ஆனந்தம் பாக்கியம் காதல் வாழ்க்கையை பற்றி அழகாகப் புரிய வைக்கிறார். சிறு சிறு வரிகளில் வாழ்கையின் பல நிகழ்வுகளை தெள்வாகத் தொடத்தெரிந்திருக்கிறது. ஆரம்பத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், கதைக்கு ஒரு அழுத்தம் கிடைத்திருக்கும். முடிவும் அவ்வளவு அழுத்தமில்லை என்று நினைக்கிறேன். அழுத்தமான காரணம் இல்லாமல் மரணத்திற்கு அழைத்துச் செல்வது போலத் தோன்றுகிறது. ஆனால்,அதிர்ச்சியைத் தருவது எழுத்தாளரின் நோக்கமென்றால், அதில் வெற்றிதான்.
நிறை: நேரடியாக மனதின் முன் பாத்திரப் படைப்புகளை நடமாட விட்டது. எழுத்து நடை.
குறை: எழுத்துப்பிழை, ஆரம்பிப்பதிலும், திடீர் முடிவிலும் அழுத்தம் தரச் செய்வதில் ஒரு சிறு சறுக்கல் இருப்பதாக ஒரு எண்ணம்.
வாழ்த்துக்கள் Badnewsindia
(விரைவில் அடுத்த பத்து...)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
விமர்சனத்திர்க்கு நன்றி.
எழுத்துப்பிழை தவிர்க்கத்தெரியாததர்க்கு வருந்துகிறே(?)ன்.
எழுத்துப் பிழை திருத்த நான் கேட்ட கேள்விக்கு விடை தர இங்கே சொடுக்கவும். இன்னும் விடை தெரியவில்லை :-)
சிறுகதையை சிறிதாக அளிக்க முயற்ச்சித்ததால் நீங்கள் சொல்வது போல் அழுத்தம் குறைந்திருக்கலாம்.
நன்றி.
நன்றி சார் தங்கள் விமர்சனத்தக்கும் வாழ்த்துக்களுக்கும்
அன்புடன்
த.அகிலன்
Post a Comment